மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மே மாதம் 3-ம் தேதி நடைபெறும் சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு தேரடி கருப்பண்ணசாமி கோவிலில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது.
மதுரையில் பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா வருகிற 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழா நடக்கும் 10 நாட்கள் தினமும் காலை, மாலையில் மாசி வீதிகளில் சுவாமி-அம்பாள் வீதி உலா வருவார்கள்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான திருக்கல்யாணம் மே 2-ம் தேதியும், தேரோட்டம் மே 3-ம் தேதியும் நடைபெறுகிறது. நான்கு மாசி வீதிகளில் நடக்கும் தேரோட்டத்தை காண மதுரை நகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் குவிவார்கள்.
தேரோட்டம் சிறப்பாக நடைபெற வேண்டும் என கருதி சித்திரை திருவிழா கொடியேற்றத்துக்கு முன்பு தேரடி வீதியில் உள்ள கருப்பண்ணசாமி கோவிலில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெறும். அதன்படி நேற்று முகூர்த்தக்கால் நடப்பட்டது.
இதில் மீனாட்சியம்மன் கோவில் சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டு சிறப்பு பூஜை நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் கோவில் துணை ஆணையர் அருணாச்சலம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முகூர்த்தக்கால் நடப்பட்டதை தொடர்ந்து தேரோட்டத்திற்கான முன்னேற்பாடு பணிகள் தொடங்கின.