சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. 6 மணி நேரத்திற்கு மேல் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த வருடத்தை விட இம்முறை அதிகளவில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். தினமும் சராசரியாக 70 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். ஒருசில நாட்களில் பக்தர்கள் எண்ணிக்கை 85 ஆயிரத்தையும் தாண்டியது.
ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியாத பக்தர்கள் வண்டிப்பெரியார், எருமேலி மற்றும் பம்பை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள உடனடி முன்பதிவு கவுண்டர்களில் முன்பதிவு செய்து தரிசனம் செய்கின்றனர்.
கடந்த இரு வாரங்களில் தரிசனம் செய்த பக்தர்கள் எண்ணிக்கை 10 லட்சத்தையும் தாண்டி விட்டது. இந்நிலையில் கடந்த இரு தினங்களாக பக்தர்கள் வருகை மேலும் அதிகரித்துள்ளது. இந்த நாட்களில் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கும் போது பக்தர்கள் வரிசை சரங்குத்தி வரை காணப்பட்டது.
பக்தர்கள் 6 மணி நேரத்திற்கும் மேல் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். நெய்யபிஷேகம் செய்வதற்கும், அரவணை, அப்பம் பிரசாதம் வாங்குவதற்கும் நீண்ட வரிசை காணப்படுகிறது. நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை என்பதாலும், இன்று வரை வார விடுமுறை நாட்கள் என்பதாலும் பக்தர்கள் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் சபரிமலையில் நிருபர்களிடம் கூறுகையில்,
சபரிமலையில் கடந்த வருடத்தை விட இம்முறை அதிகளவில் பக்தர்கள் வந்து கொண்டிருக்கின்றனர்.ஆனாலும் எந்த சிரமும் இல்லாமல் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்த மண்டல காலத்தில் கடந்த 28-ம் தேதிதான் மிக அதிகமாக 87,999 பேர் சபரிமலையில் தரிசனம் செய்தனர். இந்த வருடம் சபரிமலை கோயில் வருமானமும் அதிகரித்துள்ளது.
நடைதிறந்த 12 நாட்களில் கிடைத்த மொத்த வருமானம் ரூ.63.01 கோடியாகும். இது கடந்த வருட வருமானத்தை விட ரூ.15.81 கோடி அதிகமாகும். இந்த வருடம் அரவணை பிரசாத விற்பனை மூலம் தான் அதிகமாக ரூ.28.93 கோடி வருமானம் கிடைத்துள்ளது. இது கடந்த வருட விற்பனையை விட ரூ.9.53 கோடி அதிகமாகும். அப்பம் விற்பனை மூலம் இந்த வருடம் ரூ.3.53 கோடி கிடைத்துள்ளது.
சபரிமலை தரிசனத்திற்கு 10 வயதுக்கு உட்பட்ட ஏராளமான சிறுவர் சிறுமிகளும் வருகின்றனர். இவர்களுக்கு எளிதில் தரிசனம் செய்வதற்காக 18-ம் படிக்கு மேல் சிறப்பு நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நுழைவாயில் வழியாக நேரடியாக சென்று தரிசனம் செய்யலாம்.
சிறுவர், சிறுமிகளுடன் பெரியவர் ஒருவரும் செல்லலாம். இந்த வரிசையில் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கும் செல்ல வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.