மதுரை, ஏப். 10- உலகப்புகழ் பெற்ற கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழா மே 1-ம் தேதி தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி மே 5-ல் நடைபெறுகிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் அழகர்கோவில் கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாக்கள் உலகப் புகழ் பெற்றவையாகும். இதில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியில் லட்சக்கணக்கானோர் பங்கேற்று கள்ளழகரை வரவேற்பதும், தரிசிப்பதும் நடைபெறும்.
அத்தகு புகழ்பெற்ற கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழா மே 1-ம் தேதி திங்கள்கிழமை முதல் நாள் திருவிழாவுடன் ஆரம்பமாகிறது. அன்று மாலை 6 மணிக்குமேல் 7 மணிக்குள் தோளுக்கினியானில் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி திருவாராதனம் நடைபெறும்.
அடுத்த நாள் மே 2-ல் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளல் நடைபெறும். 3-ம் நாள் (மே 3) மாலை 7 மணிக்குமேல் அழகர் கோவிலிலிருந்து சுந்தரராஜ பெருமாள் மதுரைக்கு புறப்படுகிறார். அடுத்து 4-ம் நாள் (மே 4) மதுரை மூன்றுமாவடியில் எதிர்சேவை நடைபெறும். அன்றிரவு தல்லாகுளத்தில் சுந்தரராஜ பெருமாள், கள்ளழகர் வேடத்தில் தங்கக்குதிரை வாகனத்தில் புறப்பாடாகிறார்.
அதனைத்தொடர்ந்து மே 5-ல் அதிகாலை 5.45 மணிக்கு மேல் 6.12 மணிக்குள் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குகிறார். பின்னர் ராமராயர் மண்டபத்தில் தண்ணீர் பீச்சுதல் நடைபெறும். அன்றிரவு வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் எழுந்தருளல் நடைபெறும்.
மே 6-ல் தேனூர் மண்டபத்தில் மண்டூக முனிவருக்கு மோட்சம் அளிக்கிறார், அன்றிரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம் நடைபெறும். மே 7-ல் ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் பூப்பல்லக்கு அலங்காரத்தில் எழுந்தருள்கிறார். அடுத்தநாள் மே 8-ல் மதுரையிலிருந்து கள்ளழகர் அழகர்மலைக்கு புறப்படுகிறார். மே 9-ல் கோயிலை சென்றடைகிறார். மே 10-ல் உற்சவ சாற்றுமுறையுடன் திருவிழா நிறைவுபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் வெங்கடாஜலம், துணை ஆணையர் மு.ராமசாமி தலைமையில் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.