திருவனந்தபுரம், அக். 19- சபரிமலை ஐயப்பன் கோவிலின் புதிய மேல்சாந்தியாக பி.என். மகேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்களில் பல லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள். மேலும் மாதந்தோறும் நடத்தப்படும் மாதாந்திர பூஜையிலும் ஆயிரக்கணக்கானோர் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.
இந்நிலையில் ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று முன்தினம் (17-ம் தேதி) மாலை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார். வருகிற 22-ம் தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும்.
பக்தர்கள் நேற்று முதல் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். கணபதி ஹோமம், உஷ பூஜை, புஷ்பாபிஷேகம், நெய் அபிஷேகம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் அனைத்தும் நடைபெற்றது. சாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு செய்த பக்தர்களே அனுமதிக்கப்பட்டார்கள்.
பக்தர்கள் உடனடியாக முன்பதிவு செய்து கொள்ளும் வகையில் நிலக்கல் மற்றும் பம்பையில் முன்பதிவு மையங்கள் செயல்படுகின்றன. அங்கும் ஏராளமான பக்தர்கள் முன்பதிவு செய்து சாமி தரிசனம் செய்ய சென்றனர்.
சபரிமலை ஐயப்பன் மற்றும் மாளிகைபுரம் கோவில்களுக்கான மேல் சாந்திகள் ஆண்டுக்கு ஒரு முறை புதிதாக தேர்வு செய்யப்படுவார்கள். அடுத்த ஒரு வருடத்துக்கான புதிய மேல்சாந்திகள் தேர்வு நேற்று (18-ந்தேதி) நடைபெற்றது. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு 17 பேரும், மாளிகைபுரம் கோவிலுக்கு 12 பேரும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
அவர்களில் ஐயப்பன் கோவில் மற்றும் மாளிகைபுரம் கோவிலுக்கு தலா ஒருவர் குலுக்கல் முறையில் மேல்சாந்தியாக தேர்வு செய்யப்பட்டனர். சபரிமலையின் புதிய மேல்சாந்தியாக மூவாற்றுப்புழா ஏனநல்லூரை சேர்ந்த பி.என். மகேஷ் தேர்வு செய்யப்பட்டார்.
மாளிகைபுரம் மேல்சாந்தியாக பி.ஜி.முரளி தேர்வு செய்யப்பட்டார். பந்தளம் அரண்மனை குழந்தைகள் வைதே மற்றும் நிருபமா வர்மா ஆகியோர் மேல் சாந்திகள் தேர்வு சீட்டுகளை எடுத்து கொடுத்தனர். புதிதாக தேர்வு செய்யப்பட்ட மேல்சாந்திகள் இருவரும் கார்த்திகை மாதம் 1-ம் தேதி பொறுப்பேற்றுக் கொள்வார்கள்.