பழனி, மார்ச் 07- அறுபடை வீடு ஆன்மீகப் பயணத்தின் 2-ம் கட்டப் பயணம் நேற்று பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் இருந்து தொடங்கியது
தமிழ் கடவுள் என்று போற்றப்படுகின்ற முருகப் பெருமான் வீற்றிருக்கும் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகியவற்றிற்கு மூத்த குடிமக்கள், ஒரேமுறையாக சென்று தரிசனம் செய்திடும் வகையில் கட்டணமில்லாமல் 60 வயது முதல் 70 வயதிற்குட்பட்ட 200 பக்தர்கள் வீதம் ஆண்டிற்கு 5 முறை அதாவது 1,000 பக்தர்களை அழைத்து சென்று தரிசனம் செய்து வைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, இதன் முதற்கட்டப் பயணம் கடந்த ஜனவரி 28-ம் தேதி சென்னை கந்தக்கோட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்டது.
இதில் பங்கேற்ற 207 மூத்த குடிமக்களும் அறுபடை வீடு ஆன்மிகப் பயணம் சிறப்பாகவும், மிகுந்த மனநிறைவை தந்ததாகவும் தெரிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து, திண்டுக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு ஆகிய மண்டலங்களை சேர்ந்த 200 மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையில் அறுபடை வீடு ஆன்மீகப் பயணத்தின் 2-ம் கட்டப் பயணம் நேற்று பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் இருந்து தொடங்கியது.
பழனியில் சாமி தரிசனம் செய்த பக்தர்களை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, திண்டுக்கல் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பாரதி ஆகியோர் வரவேற்றனர். பின்னர் இந்தக்குழு திருச்செந்தூர், பழமுதிர்ச்சோலை, திருப்பரங்குன்றம், சுவாமிமலை மற்றும் திருத்தணி ஆகிய திருக்கோவில் தரிசனத்துக்கு பின் பழனியில் நிறைவடைகிறது.
இந்த ஆன்மீகப் பயணத்தில் பங்கேற்கும் மூத்த குடிமக்களுக்கு தங்குமிடம், உணவு, போர்வை, துண்டு, குளியல் சோப், டூத் பிரஷ், பேஸ்ட், முகம் பார்க்கும் கண்ணாடி, தேங்காய் எண்ணெய், சீப்பு போன்ற பொருட்கள் அடங்கிய பயண வழிப்பைகள் வழங்கப்படுகின்றன.
மேலும் அவர்களுக்கு உதவியாக செயல் அலுவலர்கள், திருக்கோவில் பணியாளர்கள் மற்றும் மருத்துவ குழுவினரும் உடன் சென்றனர்.