சென்னை, ஜூன். 03- அறுபடை வீடுகளிலும் முருகனின் அவதாரத் திருநாளான வைகாசி விசாகம் நேற்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் வைகாசி விசாக திருவிழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு. தமிழகத்தில் மட்டுமல்லாமல், மலேசியா, சிங்கப்பூர், ஸ்ரீலங்கா ஆகிய நாடுகளிலும் தமிழ் முருகப்பெருமானின் வைகாசி விசாகம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் சுமந்து வந்து முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
வைகாசி விசாக திருநாளில் முருகப் பெருமானை வழிபடுவதால் நம் பகைகள் யாவும் தொலைந்து விடும் என்பர். மேலும் இந்நாளில் தானமும், தர்மமும் செய்தால் நல்லது என்றும், தயிர்சோறு, மோர், பானகம் போன்ற குளிர்பான தானம், குலம் காக்கும் என்பது ஐதீகம்.
இந்நாளில் முருகப்பெருமானுடைய அறுபடை வீடுகளிலும் மற்றும் முருகப் பெருமான் வீற்றிருக்கும் தலங்களிலும் வைகாசி விசாகத்தையொட்டி விசேஷ பூஜைகள் நடைபெற்றன. முதல்படை வீடான திருப்பரங்குன்றத்தில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் சுமந்து வந்து முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். திருச்செந்தூரில் ஏராளமான பக்தர்கள் காவடி சுமந்து வந்து சண்முகரை வழிபட்டனர்.
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் நேற்று அதிகாலையில் இருந்தே பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் ஏராளமானோர் காவடி எடுத்தும், பாட்டுப்பாடியும் மலைக்கோவிலுக்கு வந்து முருகப் பெருமானை தரிசித்தனர்.
கோவையிலிருந்து காரமடை செல்லும் வழியில் சுமார் 35 கி.மீ. தொலைவில் உள்ள குருந்தமலை குழந்தை வேலாயுதருக்கு ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து வழிபட்டனர். அது மட்டுமல்லாது, தமிழகத்தில் முருகப் பெருமான் வீற்றிருக்கும் அனைத்து ஆலயங்களிலும் நேற்று வைகாசி விசாக திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. முருகன் ஆலயங்கள் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள வைணவ தலங்களிலும் சிவாலயங்களிலும் வைகாசி விசாகத் திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.