ஊட்டி, கே.வேலாயுதபுரம் ஓவளசுப்பெருமாள் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக விழா வரும் 20-ம் தேதி நடக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தார் வட்டம், கழுகுமலை வேலாயுதபுரம் கிராமத்தில் அருள்பாலித்து வரும் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ஓவளசுப்பெருமாள் திருக்கோவிலில் புனர் ஆவர்த்தன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா வரும் 20-ம் தேதி நடக்கிறது.
அதனையொட்டி 18-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு மங்கள இசையுடன் காப்பு கட்டுதல், கிராம தேவதைகள் பூஜை, விச்வகசேனர் ஆராதனம், பூஜைக்குரிய கும்பங்களில் புனித நீர் நிரப்பப்பட்டு யாகசாலைக்கு கடங்கள் எழுந்தருளல், விச்வக்சேனர் பூஜை, சுத்தி புண்யாக வாஜனம், கோபூஜை, வாஸ்துசாந்தி, திக்பலி கும்பங்கள் ஹாரத்தியும் நடக்கிறது.
தொடர்ந்து மாலை 6.00 மணிக்கு மங்கள இசையுடன் விச்வகசேனர் பூஜையுடன் சகல கும்பங்களில் ஆவாஹனம், ஆலய சுத்திக்காக மஹா கணபதி ஹோமமும், இரவு 9.30 மணிக்கு அயன, சமன வைபவமும், 10.45 மணிக்கு எம்பெருமான் மற்றும் தாயார் எந்திர பிரதிஷ்டை மற்றும் அஷ்டபந்தனம் சாற்றுதலும் நடக்கிறது.
19-ம் தேதி சனிக்கிழமை காலை 7.00 மணிக்கு சுவாமி மற்றும் அம்பாளுக்கு பஞ்சகவ்ய அபிஷேகம், ஆராதனையும், காலை 9.00 மணிக்கு விஷ்ணுசகஸ்ரநாம பாராயணம், சுதர்சன மற்றும் தன்வந்திரி ஹோமமும், 11 மணிக்கு கற்பூர ஆரத்தி மற்றும் பிரசாதம் வழங்குதலும், மாலை 6.30 மணிக்கு மஹாவிஷ்ணு, சுதர்சன தன்வந்திரி லட்சுமி மகாஹோமமும், இரவு 10.00 மணிக்கு அலங்கார தீபஆராதனையும் நடக்கிறது.
விழாவின் முக்கிய நாளான 20-ம் தேதியன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணிக்கு சிறப்பு ஹோம பூஜைகள் நடத்தப்பட்டு மஹா பூர்ணாகுதியும், 8.30 மணிக்கு நாடி சந்தனமும், காலை 9.40 மணிக்கு கடங்கள் புறப்பட்டு 10.10 மணிக்கு விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மஹாகும்பாபிஷேகம் நடக்கிறது.
10.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடத்தப்பட்டு தீப ஆராதனைகள் நடக்கிறது. தொடர்ந்து முற்பகல் 11.45 மணிக்கு தாயார் இருவருக்கும் திருமாங்கல்ய தாரணம் நடத்தப்பட்டு கற்பூர ஆரத்தியும் நடைபெறுகிறது. இந்த கும்பாபிஷேகத்தினை கோவில்பட்டி முரளீதரன் அய்யங்கார் தலைமையிலான பட்டாச்சாரியர்கள் நடத்தி வைக்க உள்ளனர்.
கும்பாபிஷேக விழாவினை முன்னிட்டு 17-ம்தேதி இரவு முதல் 20-ம் தேதி இரவு வரை 3 வேளையும் தொடர்ந்து அன்னதானம் நடைபெறுகிறது. கும்பாபிஷேக விழாவை சிறப்பிக்கும் விதமாக 18-ம் தேதி இரவு 10.30 மணிக்கு கே.வேலாயுதபுரம் கிராம பெண்களின் கும்மியாட்டமும், 19-ம் தேதி இரவு 10.30 மணிக்கு இன்னிசை பட்டிமன்றமும், 20-ம் தேதி இரவு 10.30 மணிக்கு இன்னிசை கச்சேரியும் நடக்கிறது.
தொடர்ந்து 21-ம் தேதி மாலை 6.00 மணிக்கு மறுவீடு அழைப்பு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. எனவே இந்த கும்பாபிஷேக விழாவில் பக்த பெருமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு ஓவளசுப்பெருமாள் மற்றும் தாயார்களுடைய பரிபூரண அருளைப் பெற்றுச் செல்ல வருமாறு கே.வேலாயுதபுரம் ஸ்ரீ ஓவளசுப்பெருமாள் திருக்கோவில் நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.