நெல்லை நெல்லையப்பர் கோவிலில் நேற்று ஆனித் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. தேரோட்டத்தின் போது வடங்கள் அறுந்து விழுந்ததால் பக்தர்கள் பெரிதும் அதிர்ச்சியடைந்தனர்.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் சுவாமி நெல்லையப்பர் – காந்திமதி அம்பாள் கோவில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாகும்.பல்வேறு சிறப்புகள் அமையப் பெற்ற சுவாமி நெல்லையப்பா் கோவிலில் ஆனித்தேரோட்ட திருவிழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும்.
இந்த ஆண்டு ஆனித்திருவிழா கடந்த 13-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் காலை, மாலை என 2 வேளைகளிலும் சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆனித்தேரோட்டம் 9-வது நாளான நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் நெல்லை மட்டுமல்லாது, அண்டை மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் திரண்டனர். இதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது.
நேற்று தேரோட்டத்தை யொட்டி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகிய 5 தேர்களும் அலங்காரங்கள் செய்யப்பட்டு தயார் நிலையில் இருந்தது. நேற்று அதிகாலை 1.15 மணியளவில் விநாயகர் தேர் பக்தர்களால் இழுக்கப்பட்டு சுவாமி சன்னதி முன்பு நிறுத்தப்பட்டது.
தொடர்ந்து அதிகாலை 3 மணிக்கு முருகர் தேர் இழுக்கப்பட்டது. பின்னர் 3.30 மணி முதல் 4.30 மணிக்குள் சுவாமி -அம்பாள் தேரில் எழுந்தருளினர். காலை 6.30 மணி முதல்7.46 மணிக்குள் சுவாமி நெல்லையப்பர் தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி தொடங்கியது.
தொடர்ந்து கோவிலில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அரகர மகாதேவா, ஓம் நமச்சிவாய என்ற கோஷங்களுடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். பின்னர் 4 ரத வீதிகளிலும் பக்தர்கள் வெள்ளத்தில் சுவாமி நெல்லையப்பர் மிதந்து வந்தார்.
அப்போது விண் அதிர கோஷங்கள் எழுப்பப்பட்டது. பிற்பகலில் வடக்கு ரதவீதிக்கு வந்து சேர்ந்த சுவாமி தேர் அங்கு நிறுத்தப் பட்டது. அதனை தொடா்ந்து அம்பாள் தேரும், நிறைவாக சண்டிகேஸ்வரா் தேரும் பக்தா்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.
முன்னதாக தேரோட்டத்தை கலெக்டர் கார்த்திகேயன், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டி.பி.எம். மைதீன்கான், ராபர்ட் புரூஸ் எம்.பி., மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா, மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.
மாநகர போலீஸ் கமிஷனர் மூர்த்தி, துணை போலீஸ் கமிஷனர்கள் ஆதர்ஷ் பசேரா, கீதா மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
நெல்லையப்பர் சுவாமி தேரை முக்கிய பிரமுகர்கள் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்த போது திடீரென தேரில் பொருத்தப்பட்டிருந்த 4 வடங்களில் 2 மற்றும் 3-வது வடங்கள் அறுந்து விழுந்தது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக 2 மாற்று வடங்கள் பொருத்தப்பட்டு மீண்டும் 8.16 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது.
பின்னர் சில நிமிடங்களில் மீண்டும் 2-வது முறையாக தேர் வடம் ஒன்று அறுந்து விட்டது. இதையடுத்து 3 வடங்களுடன் தேரோட்டம் தொடங்கி நடைபெற்றது. எனினும் 2 முறை வடம் அறுந்ததால் பக்தர்கள் மனவேதனை அடைந்தனர்.
இந்நிலையில் 3 வடங்களுடன் இழுக்கப்பட்ட நிலையில் மீண்டும் 2 முறை வடம் அறுந்து விட்டது. இதனால் 2 வடங்கள் மட்டுமே தேரில் இறுதியாக பொருத்தப்பட்டிருந்தது. தொடர்ந்து இரும்பு சங்கிலி கட்டப்பட்டு மீண்டும் தேர் இழுக்கப்பட்டது.