நாகர்கோவில், ஆக. 21- ஆவணி முதல் ஞாயிறையொட்டி நெல்லை நாகராஜா கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
நாகதோஷம் தீர்க்கும் புண்ணிய ஸ்தலங்களில் ஒன்றாக நாகர்கோவில் நாகராஜா கோவில் விளங்குகிறது. இங்கு பக்தர்கள் தோஷங்கள் நீங்கவும் திருமணங்கள் கைகூடவும் பிரார்த்தனை செய்து வருகிறார்கள். நாகராஜா கோவிலில் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அதிகமாக காணப்படும். குறிப்பாக ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் நாகர் சிலைகளுக்கு பாலூற்றி வழிபட்டால் நினைத்தது நடக்கும். திருமணங்கள் கைகூடும். தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். இதனால் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் ஆண்டு தோறும் கூட்டம் அதிகமாக காணப்படும்.
இந்த ஆண்டு ஆவணி மாதத்தில் 5 ஞாயிற்றுக்கிழமை வருகிறது. முதல் ஆவணி ஞாயிற்றுக்கிழமையான நேற்று (20-ந் தேதி) காலை 4:30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட் டது. இதை தொடர்ந்து நாகராஜருக்கு தீபாராதனையும் அபிஷேகமும் நடந்தது. அதிகாலையில் நடை திறக்கப்பட்டது முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
ஏராளமான பக்தர்கள் குடும்பத்தோடு வந்து நாகராஜரை தரிசனம் செய்தனர். குறிப்பாக பெண்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பக்தர்கள் நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றியும், மஞ்சள் பொடி தூவியும் வழிபட்டனர்.
இதனால் நாகராஜா கோவில் வளாகம் முழுவதும் நேற்று பக்தர்கள் தலையாகவே காட்சியளித்தது. பக்தர்கள் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நின்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தேவையான குடிநீர் உள்பட அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் மேற்கொண்டு இருந்தனர். கோவில் கலையரங்கத்தில் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
மேலும் பக்தர்களுக்கு வசதியாக பால் மற்றும் மஞ்சள் பொடிகள் கோவில் வாசலிலும் நாகராஜா திடல் பகுதியில் உள்ள சாலை ஒரங்களிலும் விற்பனை செய்யப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.