திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 5-ம் நாளான நேற்று காலை மோகினி அவதாரத்தில் மலையப்பசுவாமி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று மாலை கருட சேவை நிகழ்ச்சி நடைபெற்றது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் கடந்த 15-ம் தேதி தொடங்கியது. பிரம்மோற்சவத்தின் 4-வது நாளான நேற்று முன்தினம் இரவு உலகத்தில் உள்ள மன்னர்களுக்கு எல்லாம் மன்னர் தானே என்பதை உணர்த்தும் விதமாக ஏழுமலையான் கோயில் கோபுர வடிவிலான தங்க சர்வ பூபால வாகனத்தில் மலையப்ப சுவாமி தாயார்களுடன் எழுந்தருளி அருள்பாலித்தார்.
இந்நிலையில், பிரம்மோற்சவத்தின் 5-ம் நாளான நேற்று காலை நாச்சியார் திருக்கோலத்தில் (மோகினி அலங்காரத்தில்) மாய மோகத்தை போக்கும் விதமாக மலையப்ப சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மேலும் நாச்சியார் திருக்கோலத்தில் உள்ள தனது உருவத்தை (மகாவிஷ்ணு) கிருஷ்ணராக தோன்றி அவரது அழகை அவரே ரசித்தார் என்பதுபோல் நாச்சியாருடன் கிருஷ்ணரும் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிரம்மோற்சவ முக்கிய வாகன சேவையான கருட சேவை நேற்று மாலை நடைபெற்றது.