மதுரை, செப். 05- கும்பாபிஷேக ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் நேற்று 5 பெரிய கோபுரங்களுக்கு பாலாலய பூஜைகள் நடைபெற்றது.
மதுரையில் உள்ள பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டின் அனைத்து மாதங்களிலும் பல்வேறு திருவிழாக்கள், வைபவங்கள், உற்சவங்கள் நடைபெறும் இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.
ஆகம விதிகளின் படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். அந்த வகையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 8.4.2009 அன்று குடமுழுக்கு நடைபெற்றது. தற்போது 12 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதற்கான திருப்பணிகள் மேற்கொள்ள வசதியாக முதற்கட்டமாக கோவிலின் கிழக்கு ராஜகோபுரம், மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய 3 ஒன்பது நிலை கோபுரங்கள் மற்றும் அம்மன் ஏழுநிலை கோபுரம் ஆகிய 5 கோபுரங்களுக்கும் நேற்று (திங்கட்கிழமை) பாலாலயம் நடைபெற்றது.
முன்னதாக பாலாலய பூஜையை முன்னிட்டு நவக்கிரக சன்னதி அருகே 5 கோபுரங்களுக்காக 5 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இதையடுத்து யாகசாலை பூஜைகள் நிறைவடைந்ததும் புனித நீர் கலசங்கள் 2-ம் பிரகாரம் வழியாக வலம் வந்தது. பின்னர் உற்சவர் சாமி சன்னதியில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதையடுத்து அங்கு மாம்பலகையில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள 5 கோபுரங்களும் வரையப்பட்டு அதற்கு பூஜை செய்து புனிதநீர் ஊற்றி பாலாலயம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.