மதுரை,ஏப். 29- மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை காண வரும் பக்தர்கள் நெரிசலின்றி தரிசிக்க ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 23-ம் கொடியேற்றத்துடன் தொடங்கி வருகிற 4-ம் தேதி வரை நடக்கிறது. விழாவில் முக்கிய நிகழ்வான பட்டாபிஷேகம் நாளை நடக்கிறது. வரும் 2-ம் தேதி மீனாட்சி திருக்கல்யாணம், 3-ம் தேதி மாசி வீதிகளில் தேரோட்டம் நடக்கிறது.
இதில் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி திருக்கல்யாணத்தை காண பல்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் பெருமளவில் வருவார்கள். கோவிலின் உள்ளே நடைபெறும் திருக்கல்யாணத்திற்கு சுமார் 12 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். மேலும், அமைச்சர்கள், நீதிபதிகள், அரசு அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் என பலரும் கோவிலுக்கு வருகை தருவார்கள்.
இது தவிர திருக்கல்யாணம் முடிந்த பின்னர் சுவாமியை பார்க்க பல ஆயிரக்கணக்கான பக்தர்களும் கோவிலுக்கு வருவார்கள். அவ்வாறு வரும் பக்தர்களுக்கு எவ்வித இடையூறு இல்லாமல் சுவாமி தரிசனம் செய்வதற்கு தேவையான ஏற்பாடுகள் குறித்து போலீசார் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இதே போன்று தேர்திருவிழா நடைபெறும் போதும் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை மாரட் வீதிகளில் நிறுத்த பரிசீலிக்கலாம் என்றும் ஆலோசனை வழங்கப்பட்டது.