மதுரை, ஏப். 27- வரும் 2-ம் தேதி நடைபெறவுள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தில் பங்கேற்க வரும் 1-ம் தேதி திருப்பரங்குன்றத்தில் முருகப் பெருமான் தெய்வானையுடன் மதுரைக்கு புறப்பாடாகிறார்.
அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இருந்து மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் மற்றும் புட்டு திருவிழா ஆகிய 2 விழாக்களுக்கு சுப்ரமணியசுவாமி தெய்வானையுடன் மதுரைக்கு செல்வது வழக்கம்.
இந்த நிலையில் மதுரையில் சித்திரைத் திருவிழா கடந்த 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக மீனாட்சி திருக்கல்யாணம் வருகிற 2-ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக திருப்பரங்குன்றத்தில் இருந்து சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் வரும் 1-ம் தேதி திருப்பரங்குன்றத்தில் இருந்து மதுரைக்கு செல்கிறார்.
இந்த திருமணத்தில் மீனாட்சி அம்மனை சொக்க நாதருக்கு தாரைவாத்துக் கொடுப்பதற்காக திருப்பரங்குன்றம் பவளக்கனிவாய் பெருமாளும் மதுரைக்கு செல்கிறார். வரும் 2-ம் தேதி திருமண வைபவத்தில் பங்கேற்கும் சுவாமிகள் மே 5-ம் தேதி வரை மதுரையில் தங்கியிருந்து ஆவணி வீதி பகுதிகளில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
அதை தொடர்ந்து வரும் 5-ம் தேதி முருகப்பெருமான்-தெய்வானை, பவளக்கனிவாய் பெருமாள் ஆகியோர் மீண்டும் இருப்பிடம் சேருகிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.