சென்னை, ஏப் 15- தமிழ் புத்தாண்டு முன்னிட்டு நேற்று தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜை, வழிபாடு நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
உலகெங்கிலும் உள்ள தமிழர்களால் நேற்று சித்திரை முதல்நாள் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு நேற்று தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சென்னை வடபழனி முருகன் கோவிலில் சிறப்பு பூஜைகள், வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையிலேயே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த சாமி தரிசனம் செய்தனர்.
இதே போல் திருத்தணி மற்றும் திருச்செந்தூர் முருகன் கோவில்கள், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்பட அனைத்து பிரசித்தி பெற்ற கோவில்களிலும் நேற்று அதிகாலை முதலே சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
நெல்லையில் உள்ள உச்சிஷ்ட விநாயகர் கோவிலில் சித்திரை மாதம் நடைபெறும் அரிய நிகழ்வான சூரிய ஒளி சாமி மீது விழும் காட்சியை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர். ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடிவிட்டு ராமநாதசாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
நாகர்கோயில் ஆதிபராசக்தி பீடத்தில் பாரம்பரிய கனி காணும் நிகழ்ச்சி நடைபெற்றது. சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோவில், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் தாயமங்கலம் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அர்ச்சனைகள் செய்து பக்தர்கள் வழிபட்டனர்.
இதற்காக அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு மூலவர் முத்துமாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தன . பழனி மலைக்கோயிலில் அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர். தமிழ் புத்தாண்டையொட்டி அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. திருச்சி உறையூர் காவல் தெய்வமான வெக்காளியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இதே போல் தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.