மதுரை, ஏப் 07- மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா வருகிற 12-ம் தேதி (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
சித்திரை மாதத்தில் முத்திரை பதிக்கும் உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை பெருவிழா ஒவ்வொரு வருடமும் விமரிசையாக நடைபெற்று வருகிறது. 10 நாட்கள் நடைபெறும் விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். சித்திரை திருவிழாவால் மதுரை நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கும்.
தமிழகத்தில் நடக்கும் திருவிழாக்களில் முதன்மையான மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இந்த ஆண்டு வருகிற 12-ம் தேதி (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்றைய தினம் சுவாமி சன்னதி முன்புள்ள கொடிமரம் அலங்கரிக்கப்பட்டு காலை 9.55 மணி முதல் 10.19 மணிக்குள் மீனாட்சி, சுந்தரேசுவரர் முன்னிலையில் கொடியேற்றம் நடைபெறும்.
அன்று மாலை கற்பக விருட்சக வாகனத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் சிம்ம வாகனத்தில் மீனாட்சி அம்மனும் 4 மாசி வீதிகளில் உலா வருகின்றனர். 2-ம் நாள் (13-ம் தேதி) திருவிழாவில் காலையில் சுவாமி-அம்பாள் தங்க சப்பரத்திலும், இரவு பூதம்-அன்னம் வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர்.
3-ம் நாள் (14-ம் தேதி) காலையில் 4 சப்பர வாகனங்களிலும், இரவு கைலாசபர்வதம், காமதேனு வாகனங்களில் சுவாமி-அம்பாள் எழுந்தருளி வீதி உலா வந்து அருள்பாலிக்கின்றனர். 4-ம் நாள் திருவிழாவான 15-ம் தேதியன்று காலை 9 மணிக்கு தங்கப்பல்லக்கில் சுவாமி-அம்பாள் எழுந்தருளி சின்னக்கடை தெரு, தெற்குவாசல் வழியாக வில்லாபுரம் பாகற்காய் மண்டகப்படியில் எழுந்தருளுகிறார்கள். பின்னர் மாலை 6 மணிக்கு அங்கிருந்து சுவாமி-அம்பாள் கோவிலுக்கு திரும்புகிறார்கள்.
5-ம் நாளான 16-ம் தேதி காலையில் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி வடக்கு மாசி வீதியில் உள்ள ராமாயணச்சாவடி, நவநீத கிருஷ்ணசுவாமி தேவஸ்தான மண்டகப்படியில் எழுந்தருளுகிறார்கள். இரவு 7 மணிக்கு அங்கிருந்து தங்க குதிரை வாகனத்தில் புறப்பாடாகி கோவிலுக்கு சுவாமி-அம்பாள் திரும்புகிறார்கள். 6-ம் நாள் (17-ம் தேதி) திருவிழாவில் காலையில் தங்க சப்பரத்திலும், இரவு தங்க ரிஷபம்-வெள்ளி ரிஷபம் வாகனத்திலும் வீதி உலா நடைபெறுகிறது.
7-ம் நாளான 18-ம் தேதி காலை தங்கசப்பரத்திலும், இரவு நந்திகேசுவரர், யாளி வாகனத்திலும் சுவாமி, அம்பாள் வீதி உலா வருகிறார்கள். விழாவில் 8-ம்நாளான 19-ம் தேதியன்று காலையில் தங்கப்பல்லக்கு வீதி உலா நடைபெறுகிறது. அன்று இரவு 7.35 மணியளவில் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நடைபெறுகிறது.
கோவில் அம்மன் சன்னதி ஆறுகால் பீடத்தில் ரத்தின ஆபரணங்கள் இழைத்த ராயர் கீரிடம் சாற்றி, செங்கோல் வழங்கி மதுரை நகரின் ஆட்சி பொறுப்பை ஏற்கும் வகையில் மீனாட்சி அம்மனுக்கு செங்கோல் வழங்கி பட்டாபிஷேகம் நடக்கும். அதனை தொடர்ந்து இரவு 9 மணிக்கு வெள்ளி சிம்மாசனத்தில் (கைபாரம்) வீதி உலா நடக்கும்.20-ம் தேதி காலை மரவர்ண சப்பரத்திலும் வீதி உலா நடக்கிறது.
அன்று மாலை மீனாட்சி அம்மன் இந்திர விமானத்தில் எழுந்தருளி 4 மாசி வீதிகளில் வந்து அஷ்டதிக்கு பாலகர்களை போரிட்டு வெற்றி கொள்ளும் வகையில் திக்கு விஜயம் நடக்கிறது.விழாவில் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் 21-ம் தேதி விமரிசையாக நடைபெறுகிறது. அன்று இரவு மணக்கோலத்தில் சுவாமி-அம்பாள் யானை, ஆனந்த ராயர் பூப்பல்லக்கில் வீதி உலா வருகின்றனர்.
வரும் 22-ம் தேதி காலை திருத்தேரோட்டம் நடக்கிறது. 23-ம் தேதி இரவு வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி-அம்பாள் வீதி உலா வருகிறார்கள்.சித்திரை திருவிழாவை முன்னிட்டு மீனாட்சி அம்மன் கோவிலில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.