மதுரை, மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா ஏப்ரல் 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ஏப்ரல் 23-ம் தேதி கள்ளழகர் வைகையில் எழுந்தருளும் வைபவம் நடைபெறுகிறது.
தமிழகத்தில் இரண்டாவது பெரிய நகரமான மதுரை திருவிழா நகரம் என்று அழைக்கப்படுகிறது. உலகில் வேறெங்கும் காண முடியாத அளவிற்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் ஆண்டிற்கு 12 மாதங்களும் 10 நாட்களுக்கு குறையாமல் திருவிழா நடைபெறும்.
மேலும் மதுரையில் நடக்கும் சித்திரைத் திருவிழாவும், தெப்பத்திருவிழாவும் மிகவும் பிரசித்தி பெற்றது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஏப்ரல் 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இது குறித்து கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
உலகப்பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா வாஸ்து சாந்தியுடன் ஏப்ரல் 12-ம் தேதி காலை 9.55 மணிக்கு மேல் 10.19-க்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கோவில் பட்டர்கள் கொடியேற்றி திருவிழாவை துவக்கி வைக்கின்றனர்.
பின்னர் கொடி மரத்திற்கு பூ மாலை சூட்டி, மலர்கள் தூவி சிறப்பு தீபாராதனை நடைபெறும். விழாவை முன்னிட்டு கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அன்று இரவு 7 மணிக்கு சுவாமி சுந்தரேஸ்வரர் சிம்ம வாகனத்திலும், மீனாட்சியம்மன் கற்பக விருட்சக வாகனத்திலும் மாசி வீதிகளில் உலா வருகின்றனர். தொடர்ந்து பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்மன் உலா வருகின்றனர்.
ஏப்ரல் 19-ம் தேதி இரவு 7.35 மணிக்கு மீனாட்சியம்மனுக்கு பட்டாபிஷேகம், ஏப்ரல் 20-ம் தேதி திக்கு விஜயம், ஏப்ரல் 21-ம் தேதி காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்கு மேல் திருக்கால்யாணம் நடக்கிறது. ஏப்ரல் 22-ம் தேதி காலை 6.30 மணிக்கு மாசி வீதிகளில் மீனாட்சி, சுந்தரேஸ்வரர், பிரியாவிடையுடன் தேரோட்டம் நடைபெறுகிறது.
அதை தொடர்ந்து ஏப்ரல் 23-ம் தேதி கள்ளழகர் வைகையில் எழுந்தருளும் வைவபம் நடைபெறுகிறது. இதை காண்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அன்றைய தினம் இரவு கோவில் தெப்பத்தில் தீர்த்தம் மற்றும் தேவேந்திர பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.
சித்திரை திருவிழாவிற்கான ஏற்பாடுகளை தக்கார் ருக்மணி பழனிவேல் ராஜன் மற்றும் அறங்காவலர்கள், இணை கமிஷனர் கிருஷ்ணன் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.