திருமலை, மார்ச் 30- திருப்பதி கோதண்டராமர் கோவிலில் ஏப்ரல் 5-ம் தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா ஏப்ரல் 4-ம் தேதி அங்குரார்ப்பணத்துடன் தொடங்கி 13-ம் தேதி வரை கோலாகலமாக நடக்கிறது. விழா ஏற்பாடுகள் குறித்து திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி வீரபிரம்மன் தலைமையில் மறு ஆய்வுக்கூட்டம் நடந்தது.
கூட்டத்துக்கு பிறகு நிருபர்களிடம் வீரபிரம்மன் கூறியதாவது:-
ஏப்ரல் 5-ம் தேதி திருப்பதி கோதண்டராமர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வாகன சேவை தினமும் காலை 7 மணியில் இருந்து 10 மணி வரையிலும், இரவு 7 மணியில் இருந்து 9 மணி வரையிலும் நடக்கிறது.
பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஏப்ரல் 9-ம் தேதி இரவு கருட வாகனம், ஏப்ரல் 10-ம் தேதி அனுமந்த வாகனம், ஏப்ரல் 13-ம் தேதி சக்கர ஸ்நானம் நடக்கிறது.
பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்குதல், கலாசார நிகழ்ச்சிகள், பாதுகாப்பு, குடிநீர், மோர், மலர் மற்றும் மின் விளக்கு அலங்காரம் போன்ற அனைத்து ஏற்பாடுகளை செய்ய அந்தந்தத்துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்படுவார்கள்.
வாகன சேவைக்கு முன்னால் பக்தி பஜனைகள் மற்றும் கோலாட்டங்கள் நடக்கிறது. பிரம்மோற்சவ விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் பக்தி சேனலில் நேரடியாக ஒளிபரப்பப்படும். பக்தர்களுக்கு ராமகோடி புத்தகங்கள் வினியோகம் செய்யப்படும்.
போதுமான எண்ணிக்கையில் ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்களை நியமித்து பக்தர்களுக்கு சேவை செய்யப்படும். ஏப்ரல் 17-ம் தேதியில் இருந்து 19-ம் தேதி வரை ராம நவமி உற்சவம், ஏப்ரல் 21-ம் தேதியில் இருந்து 23-ம் தேதி வரை வருடாந்திர தெப்போற்சவம் நடக்கிறது. இந்த விழாக்களும் வெகுவிமரிசையாக நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.