திருப்பதி, அக். 19- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரமோற்சவ விழாவில் முக்கிய நிகழ்வான தங்க கருட சேவை இன்று நடைபெறுகிறது. இதையொட்டி தமிழகத்தில் இருந்து கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரமோற்சவ விழா கடந்த 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து தினமும் காலை இரவு சாமி வீதி உலா நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் இரவு ஏழுமலையான் முத்து பந்தல் வாகனத்திலும், நேற்று காலை சர்வ பூபால வாகனத்திலும் வீதி உலா வந்தார்.
பிரமோற்சவ விழாவில் முக்கிய நிகழ்வான தங்க கருட சேவை இன்று நடைபெறுகிறது. கருட சேவை தரிசனத்துக்கு நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலையில் நேற்று காலை முதல் குவிய தொடங்கி உள்ளனர். இதனால் திருமலையில் எங்கு பார்த்தாலும் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது.
கருட சேவையை முன்னிட்டு நேற்று மாலை முதல் நாளை காலை வரை மலைப்பாதையில் பைக்குகளுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.இதே போல் பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், பால், மருத்துவ வசதி உள்ளிட்டவைகளை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தயார் நிலையில் வைத்துள்ளனர்.
பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்த போலீசார் மற்றும் தேவஸ்தான விஜிலன்ஸ் அதிகாரிகள் கூடுதலாக நியமிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். கருட சேவையையொட்டி சென்னை, வேலூர், சேலம், கோவை, திருச்சி, மதுரை ஆகிய இடங்களில் இருந்து கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.