புதுடெல்லி,ஏப். 23- நாடு முழுவதும் நேற்று ரம்ஜான் பண்டிகை இஸ்லாமிய பெருமக்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி மசூதிகளில் சிறப்பு தொழுகை நடந்தது.
டெல்லியில் ரம்ஜான் பண்டிகையையொட்டி ஜீம்மா மசூதிக்கு சுமார் ஒரு லட்சம் பேர் புத்தாடைகள் அணிந்து வந்திருந்தனர். அங்கு ரமலான் சிறப்பு தொழுகையில் அவர்கள் ஈடுபட்ட பின்னர் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். டெல்லி நாடாளுமன்ற சாலையில் உள்ள மசூதியில் இஸ்லாமியர்கள் ஒன்று திரண்டு தொழுகையில் ஈடுபட்டனர். இதில் குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்று தொழுகையில் ஈடுப்பட்டனர்.
கேரள மாநிலம் கொச்சியில் உள்ள களூர் சர்வதேச மைதானத்தில் ரமலான் தொழுகைக்காக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடி தொழுகையில் ஈடுப்பட்டனர். இதில் நடிகர்கள் மம்மூட்டி, அவரது மகனும், நடிகருமான துல்கர் சல்மான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மத்திய பிரதேசத்தில் உள்ள மசூதியின் வளாகத்தில் ரமலான் தொழுகையையொட்டி ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. ஆயிரக்கணக்கானோர் புத்தாடைகள் அணிந்து வந்து ஒன்றுகூடி தொழுகையில் ஈடுபட்டனர். பின்னர், சகோதரத்துவத்தை போற்றும் வகையில் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி அவர்கள் வாழ்த்தை பரிமாறிக் கொண்டனர்.
மேற்கு வங்க மாநிலம் ரெட் ரோடு பகுதியில் ரமலான் தொழுகைக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இதில் மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, திரிணமுல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜி பங்கேற்றனர்.
தமிழகத்தில் கோவை, ஈரோடு, மதுரை, திருச்சி, நாகர்கோவில் உள்ளிட்ட பல இடங்களில் அமைதி, ஆரோக்கியம், சமாதானம் போன்றவற்றை வலியுறுத்தி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.