மதுரை, மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் சூடும் நிகழ்ச்சி நாளை மறுதினம் 30-ம் தேதி நடைபெறுகிறது.
பிரசித்தி பெற்ற மீனாட்சியம்மன் கோவில் சித்திரைத் திருவிழா கடந்த 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமி, அம்மன் பல் வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர்.
அதை தொடர்ந்து நேற்று முன்தினம் 4-ம் நாள் நிகழ்ச்சியாக பாண்டிய மன்னர்களின் படை சேனாதிபதிகளாக இருந்த அழகப்ப பிள்ளை – தானப்ப பிள்ளை வகையறாக்களை கவுரவிக்கும் வகையில், பிரியாவிடை சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து புறப்பாடாகி மாசி வீதி வழியாக வில்லாபுரம் பாகற்காய் மண்டகப்படியில் எழுந்தருளினர். வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அதை தொடர்ந்து வரும் 30-ம் தேதி மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெறுகிறது.
சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி திருக்கல்யாணம் மே 2-ம் தேதியும், மே 3-ல் தேரோட்டமும் நடைபெறுகிறது. மே 4-ம் தேதியுடன் மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா நிறைவு பெறுகிறது.
இதைத் தொடர்ந்து மே 04-ம் தேதி வைகை ஆற்றில் இறங்குவதற்காக அழகர்மலையில் இருந்து புறப்பட்டு, கள்ளழகர் மதுரை புறப்படும் வைபவம் நடைபெறுகிறது. மே 04-ம் தேதி மூன்று மாவடியில் எதிர்சேவையும், மே 05-ம் தேதி சித்ரா பெளர்ணமி நாளில், மதுரை சித்திரை திருவிழாவின் மிக முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம் நடைபெறுகிறது.