மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது. குருப்பெயர்ச்சி விழா ஏற்பாடுகளை அதிகாரிகள் தீவிரமாக செய்து வருகின்றனர்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு சித்திர ரத வல்லபபெருமாளை நோக்கி குருபகவான் தவக்கோலத்தில் சுயம்புவாக எழுந்தருளி உள்ளார். அருகில் சக்கரத்தாழ்வார் உள்ளார்.
இங்கு குருப்பெயர்ச்சி விழா 3 நாட்கள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு வருகிற 29-ம் தேதி காலை 9.30 மணிக்கு லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் குருப்பெயர்ச்சி விழா தொடங்குகிறது. 1-ம் தேதி (புதன்கிழமை) பிற்பகல் 12 மணி வரை தொடர்ந்து 3 நாட்கள் லட்சார்ச்சனை நடைபெறும்.
அன்று மதியம் 3 மணி அளவில் யாகசாலை தொடங்கி 5.21 மணிக்குள் பரிகார மகாயாகம், மகா பூர்ணாகுதி, திருமஞ்சனம், சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
குருப்பெயர்ச்சியை முன்னிட்டு ரிஷபம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம், மீனம் ஆகிய ராசிகளுக்கு பரிகாரம் செய்ய வேண்டும். குருப்பெயர்ச்சியை முன்னிட்டு லட்சார்ச்சனை மற்றும் பரிகாரம் செய்ய விரும்பும் ராசிக்காரர்கள் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், வாடிப்பட்டி தாசில்தார் மூர்த்தி, சமயநல்லூர் துணை கண்காணிப்பாளர் ஆனந்தராஜ் மற்றும் சுகாதாரத்துறையினர் குருப்பெயர்ச்சி விழா ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
குருப்பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டு வருகிறது. விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் கார்த்திகை செல்வி, கோவில் பணியாளர்கள் நாகராஜன், மணி, நித்தியா, ஜனார்த்தனன் ஆகியோர் செய்து வருகின்றனர்.
குருப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு அன்று இரவு 10 மணி வரை தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தினசரி காலை 8 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், பகல் 3.30 மணி முதல் மாலை 6 மணி வரையும், வியாழக்கிழமை அன்று காலை 7.30 மணி முதல் பகல் 2 மணி வரையும், பகல் 3.30 மணி முதல் இரவு 7 மணி வரையும் பக்தர்களுடைய வசதிக்காக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.