திருப்பதி, திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள், தர்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில் மக்கள் குடும்பத்துடன் சுற்றுலா தளங்களுக்கும், கோயில்களுக்கும் படையெடுக்க தொடங்கியுள்ளனர். இதனால் அனைத்து சுற்றுலா தளங்களிலும் மக்கள் கூட்டம் அதிகரித்தே காணப்படுகிறது. சுற்றுலா தளங்களே இப்படியானால், சித்திரை மாதத்தில் கோயில் தளங்களை சொல்லவா வேண்டும். எப்போதும் கூட்டம் அதிகரித்தே காணப்படும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில், சித்திரை மாதத்தில் கூடுதலாக பக்தர்களின் வருகை இருக்கும். இதனால அனல் பறக்கும் வெயிலிலும் 18 மணி நேரம் காத்திருந்து, பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்து வருவதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தேவஸ்தானம் தெரிவித்துள்ளதாவது., ‘வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 31 அறைகளில் ஏழுமலையான் தரிசனத்துக்காக பக்தர்கள் காத்திருக்கின்றனர். இதனால், தர்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவர்கள்) 18 மணி நேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணி நேரமும், இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தர்களுக்கு 3 முதல் 4 மணி நேரமும் தேவைபடுகிறது. அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணி வரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், அவர்களின் பெற்றோர், இரவு 10 மணி வரை அனைத்து பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர் என தெரிவித்துள்ளது.