திருமலை, பிப். 15- ரதசப்தமியையொட்டி இன்று முதல் 17-ம் தேதி வரை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அனைத்து கட்டண சேவைகள், வி.ஐ.பி. தரிசனம், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கைக்குழந்தைகளுடன் வரும் பெற்றோர் தரிசனம் ஆகிய சிறப்பு தரிசன சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரதசப்தமி விழா நாளை நடைபெற உள்ளது. இந்த ரதசப்தமி நாளில் காலை முதல் இரவு வரை சூரியபிரபை, சின்ன சேஷம், கற்பக விருட்சம், அனுமந்த, கருட, சர்வ பூபால, சந்திர பிரபை ஆகிய 7 வாகனங்களில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
இந்நிலையில், ரதசப்தமியையொட்டி இன்று 15-ம் தேதி மற்றும் 16, 17 ஆகிய தேதிகளில் அனைத்து கட்டண சேவைகள், வி.ஐ.பி. தரிசனம், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கைக்குழந்தைகளுடன் வரும் பெற்றோர் தரிசனம் ஆகிய சிறப்பு தரிசன சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருப்பதியில் வழங்கப்படும் சர்வ தரிசனத்திற்கான இலவச டோக்கன்கள் இன்று 15-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை வழங்குவது நிறுத்தப்பட உள்ளது. சிபாரிசு கடிதங்களின் அடிப்படையில் அறைகள் ஒதுக்கீடு செய்யப்படும் எம்.பி.சி.-34 மற்றும் டி.பி.கவுன்டர்கள் நாளை 16-ம் தேதி நள்ளிரவு வரை மூடப்பட்டிருக்கும்.
எனவே சி.ஆர்.ஓ. மற்றும் பத்மாவதி விசாரணை மையத்தில் மட்டும் அறைகள் வழங்கப்பட உள்ளது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. அதே போல் ஏற்கனவே ஆன்லைனில் ரூ. 300 டிக்கெட் பெற்ற பக்தர்களும், இலவச தரிசனத்தில் நேரடியாகவும் பக்தர்கள் வழக்கம்போல் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.