சபரிமலை, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவிலில் 27 இடங்களில் கட்டணமில்லா வைபை சேவை தொடங்கப்பட்டுள்ளது.
2023-2024-ம் ஆண்டுக்கான மண்டல-மகரவிளக்கு சீசனையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த நவம்பர் மாதம் 16-ந் தேதி திறக்கப்பட்டது. மறுநாள் முதல் வழக்கமான பூஜை வழிபாடு நடைபெற்று வந்த நிலையில் 41 நாட்கள் பூஜையின் சிகர நிகழ்ச்சியாக கடந்த 27-ந் தேதி மண்டல பூஜை நடைபெற்றது. அன்றைய தினம் இரவே நடையும் அடைக்கப்பட்டது. இந்த மண்டல சீசனில் 33 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் அய்யப்பனை தரிசனம் செய்தனர்.
இதையடுத்து மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த 30-ம் தேதி திறக்கப்பட்டது. வருகிற 15-ந் தேதி அதிகாலை 2.46 மணிக்கு மகர சங்கிரம பூஜை நடைபெறும். அன்று மாலை 6.30 மணிக்கு அய்யப்ப சாமிக்கு திருவாபரணம் அணிவித்து சிறப்பு தீபாராதனையும், தொடர்ந்து மகரஜோதி தரிசனமும் நடைபெறுகிறது.
இந்த நிலையில், மகரவிளக்கு பூஜையையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவிலில் கட்டணமில்லா வைபை சேவை தொடங்கப்பட்டுள்ளது. பி.எஸ்.என்.எல். உடன் இணைந்து வைபை சேவையை திருவிதாங்கூர் தேவஸ்தானம் தொடங்கி வைத்தது. பம்பை முதல் சன்னிதானம் வரை அய்யப்ப பக்தர்களுக்காக மேலும் 27 இடங்களில் வைபை சேவை தொடங்கப்பட்டுள்ளது.