அயோத்தி, அயோத்தி கோவில் கருவறை பீடத்தில் நேற்று சுமார் 200 கிலோ எடையுள்ள பாலராமர் சிலை கிரேன் உதவியுடன் வைக்கப்பட்டது.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் மிக பிரம்மாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. 380 அடி நீளம், 250 அடி அகலம், 161 அடி உயரத்தில் 3 அடுக்குகளுடன் இந்த ஆலயம் அமைகிறது. 392 பிரம்மாண்டமான தூண்கள், 44 நுழைவாயில்களுடன் இந்த ஆலயம் அமைக்கப்பட்டு வருகிறது.
ஆலயத்தின் கீழ் தளத்தில் கருவறை அமைந்துள்ளது. அங்கு சுமார் 5 அடி உயரத்தில் ராமரின் சிலை அமைக்கப்படுகிறது. அயோத்தி ராமர் பிறந்து, வளர்ந்த இடம் என்பதால் அங்கு 5 வயதுடைய பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
மைசூரை சேர்ந்த சிற்பி இந்த பால ராமர் சிலையை செதுக்கி உள்ளார். இந்த சிலை பிரதிஷ்டை வருகிற 22-ம் தேதி பிரதமர் மோடி முன்னிலையில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதையொட்டி 7 நாட்கள் பூர்வாங்க பூஜை மற்றும் யாகசாலை பூஜைகள் கடந்த 16-ம் தேதி முதல் தொடங்கின.
நேற்று முன்தினம் பால ராமர் சிலையை அயோத்தி கோவிலுக்குள் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக நேற்று முன்தினம் காலை சரயு நதியில் இருந்து புனித நீர் சேகரித்து ஆலயத்துக்கு எடுத்துவரப்பட்டது. இதையடுத்து பால ராமர் போன்ற உருவம் கொண்ட வெள்ளியிலான ராமர் சிலை நேற்று மாலை ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது.
இதையடுத்து நேற்று முன்தினம் இரவு மைசூர் சிற்பி செதுக்கி உள்ள பால ராமர் சிலை ஆலயத்துக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டது. சுமார் 200 கிலோ எடையுள்ள அந்த சிலை கிருஷ்ணா எனும் வகை கருங்கல்லால் உருவாக்கப்பட்டு இருக்கிறது. கிரேன் மூலம் அந்த சிலையை ஆலயத்துக்குள் எடுத்து சென்றனர்.
நேற்று பால ராமர் சிலையை கருவறைக்குள் பீடத்தில் நிலைநிறுத்தும் பணிகள் நடந்தன. அதற்கு முன்னதாக கருவறையில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. புனித நீர் மூலம் கருவறை சுத்தப்படுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து பால ராமர் சிலைக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. அதை தொடர்ந்து அந்த சிலை கருவறை பீடத்தில் வைக்கப்பட்டது. இதையடுத்து பால ராமர் சிலைக்கு அடுத்தடுத்து சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது.
நாடு முழுவதிலும் இருந்து புண்ணிய நதிகளில் தீர்த்தங்கள் சேகரிக்கப்பட்டு அயோத்திக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அந்த புனித நீர்கள் மூலம் பால ராமர் சிலை சுத்தப்படுத்தப்பட உள்ளது. இன்று இந்த பணிகள் நடைபெறுகிறது. இதற்கிடையே அயோத்தி ஆலயம் அருகே பிரமாண்டமான பந்தலில் யாகசாலை பூஜைகளும் நடந்து வருகின்றன. 1008 லிங்கங்கள் அமைத்து நடந்து வரும் பூஜைகளும் அயோத்தி மக்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளன.