மதுரை, ஏப். 15- தமிழ் புத்தாண்டையொட்டி நேற்று மதுரை மீனாட்சி அம்மனுக்கு பட்டுச்சேலை- மனோரஞ்சிதம் மாலை அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
தமிழ்ப் புத்தாண்டு நேற்று பிறந்ததையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் திரண்டனர். உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் அதிகளவில் திரண்டதால் மீனாட்சி அம்மன் கோவில் வெளியிலும் பக்தர்கள் தரிசனத்திற்காக காத்திருந்தனர்.
மீனாட்சி அம்மன் கோவிலில் தமிழ் புத்தாண்டை வரவேற்கும் விதமாக கோவில் முன்பு வண்ண மலர்களால் அத்தப்பூ கோலம் போடப்பட்டு இருந்தது. இது பக்தர்கள் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது. தமிழ் புத்தாண்டு பிறப்பையொட்டி மீனாட்சி அம்மனுக்கு நேற்று பட்டுச்சேலை- மனோரஞ்சிதம் மாலை அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளித்து தரிசனம் செய்தனர். பக்தர்களின் வசதிக்காக மாசி வீதிகள் மற்றும் ஆடி வீதிகளில் தற்காலிக கழிவறை மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது.
புத்தாண்டை முன்னிட்டு மீனாட்சி அம்மன் கோவில், கூடல் அழகர் பெருமாள் கோவில், தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில், மதன கோபால சுவாமி கோவில், இம்மையிலும் நன்மை தருவார் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.