லக்னோ, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் சுமார் 24 லட்சம் அகல் விளக்குகளை ஏற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இதன் திருப்பணிகள் முடிவுற்ற நிலையில் வரும் ஜனவரி மாதம் கோவில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டு பக்தர்கள் வழிபாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அயோத்தி ராமர் கோவிலை பக்தர்கள் வழிபாட்டுக்கு திறந்து வைக்கிறார்.
இங்கு ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை முன்னிட்டு தீப உற்சவம் எனப்படும் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கடந்த 2017-ம் ஆண்டு இந்த தீப உற்சவ விழாவை உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தார். அந்த உற்சவத்தின் போது, ராமர் கோவிலில் லட்சக்கணக்கான தீபங்கள் ஏற்றப்படும்.
அந்த வகையில் 2017-ம் ஆண்டு 1.71 லட்சம் தீபங்களும், 2018-ம் ஆண்டு 3.01 லட்சம் தீபங்களும், 2019-ம் ஆண்டு 4.04 லட்சம் தீபங்களும், 2020-ல் 6.06 லட்சம் தீபங்களும், 2021-ல் 9.41 லட்சம் தீபங்களும், கடந்தாண்டு 15.76 லட்சம் தீபங்களும் ஏற்றப்பட்டது. இந்த ஆண்டு ராமர் கோவில் பிரம்மாண்டமாக கட்டி முடிக்கப்பட்டுள்ளதால் உலக சாதனை நிகழ்ச்சி போல 24 லட்சம் தீபங்கள் ஏற்றப்பட உள்ளது. இது ராமர் கோவில் சுற்று பகுதியில் 51 இடங்களில் ஏற்றப்படுகிறது. இந்த பிரம்மாண்ட தீபம் ஏற்றும் நிகழ்ச்சி இன்று இரவு நடைபெறுகிறது.
இதில் 21 லட்சம் தீபங்கள் ஏற்றுவது இலக்காக வைக்கப்பட்டுள்ளது. எனவே 24 லட்சம் தீபங்கள் ஏற்றி அதில் சுமார் 3 லட்சம் தீபங்கள் ஆங்காங்கே அணைந்தாலும் 21 லட்சம் தீபங்கள் ஒரே நேரத்தில் பிரகாசமாக ஜொலிக்க செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தீப உற்சவத்தில் முந்தைய சாதனைகளை முறியடிக்க உ.பி. அரசு திட்டமிட்டுள்ளது.
இந்நிகழ்ச்சிக்கு ஒரு லட்சம் லிட்டர் எண்ணெய் மற்றும் திரிகள் பயன்படுத்தப்படஉள்ளது. இதனை லோகியா அவத் பல்கலைக் கழகத்தினர் முன்னின்று கவனித்து வருகின்றனர். இந்த தீப உற்சவத்திற்காக ரூ. 3 கோடி செலவிடப்படுகிறது. இதில் பங்கேற்கும் தன்னார்வலர்களுக்கு பிரத்யேக சீருடை வழங்கப்பட்டுள்ளது.