சென்னை, ஆக. 12- ஆடி கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி தமிழகத்தில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் விரதமிருந்து அம்மன் கோவில்களுக்கு சென்று வழிபடுவது வழக்கம். நேற்று ஆடி கடைசி வெள்ளியாகும். இதனால் அம்மன் கோவில்களில் பக்தர்கள் அதிகளவில் குவிந்தனர்.
சக்தி தலங்களில் முதன்மையான திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நேற்று அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, வழிபாடு நடந்தது. அதிகாலையிலேயே ஏராளமான பக்தர்கள் கோவிலில் கூடி எலுமிச்சை, நெய்விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டனர். பின்னர் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
இதே போல் பஞ்சபூத தலங்களில் நீர் தலமான திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில், உறையூர் வெக்காளியம்மன் கோவில்களிலும் நேற்று பக்தர்கள் அதிகளவில் குவிந்து தரிசனம் செய்தனர்.
தஞ்சை புன்னை நல்லூர் மாரியம்மன், கரூர் மாரியம்மன், நாகை நெல்லுக்கடை மாரியம்மன், பெரம்பலூர் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன், புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை மற்றும் திருவப்பூர் மாரியம்மன், இருக்கன்குடி மாரியம்மன் கோவில், மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதே போல் தமிழகத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் ஆடி கடைசி வெள்ளியையொட்டி நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.