மதுரை, மே. 07- சித்திரை திருவிழாவின் ஒரு பகுதியாக நேற்று வண்டியூரில் இருந்து புறப்பட்ட கள்ளழகர், தேனூர் மண்டபத்தில் எழுந்தருளி அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார். அதை தொடர்ந்து ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதார நிகழ்ச்சி நடைபெறுகிறது.
மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் நேற்று முன்தினம் காலை நடந்தது. இதனை காண 10 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் திரண்டனர். சுமார் ஒரு மணி நேரம் அங்கு அமைக்கப்பட்டிருந்த மண்டபத்தில் கள்ளழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அதன் பின்னர் மதிச்சியம் ராமராயர் மண்டபத்தில் எழுந்தருளினார். அப்போது கள்ளழகர் வேடமணிந்த பக்தர்கள் கள்ளழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து குளிர்வித்தனர். இரவு 9 மணி அளவில் வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவிலில் கள்ளழகர் எழுந்தருளினார். அங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கள்ளழகரை தரிசனம் செய்தனர்.
வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவிலில் கள்ளழகருக்கு நேற்று காலை திருமஞ்சனம் நடந்தது. அதனைத் தொடர்ந்து ஏகாந்த சேவை, பக்தி உலாத்துதல் நடந்தன. அதனைத் தொடர்ந்து கள்ளழகர் சேஷ வாகனத்தில் எழுந்தருளினார். அப்போது திரளான பக்தர்கள் சர்க்கரை தீபம் எடுத்து வழிபட்டனர்.
பின்பு அங்கிருந்து புறப்பட்ட கள்ளழகர் தேனூர் மண்டபத்தை வந்தடைந்தார். அங்கு கருட வாகனத்தில் எழுந்தருளினார். பின்னர் மண்டூக முனிவருக்கு கள்ளழகர் சாப விமோசனம் கொடுக்கும் நிகழ்வு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
அதை தொடர்ந்து மாலை 3.30 மணியளவில் அனுமன் கோவிலில் கள்ளழகர் எழுந்தருளினார். அப்போது பக்தர்கள் அங்க பிரதட்சணம் செய்து வழிபாடு நடத்தினர். அதை தொடர்ந்து மீண்டும் ராமராயர் மண்டகப்படிக்கு கள்ளழகர் சென்றார். அங்கு இரவு 11 மணி முதல் இன்று (7-ம் தேதி) காலை வரை விடிய, விடிய தசாவதார நிகழ்ச்சி நடக்கிறது.
மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வராக அவ தாரம், நரசிம்ம அவதாரம், வாமன அவதாரம், பரசுராம அவதாரம், ராம அவதாரம், பலராம அவதாரம், கிருஷ்ண அவதாரம், மோகன அவதாரம் ஆகிய திருக்கோலங்களில் அழகர் காட்சி அளிக்கிறார்.
இன்று காலை 6 மணிக்கு மோகன அவதார கோலத்தில் கள்ளழகர் வீதி உலா வருகிறார். பகல் 12 மணிக்கு ராமராயர் மண்ட பத்தில் அனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க திருக்கோலத்தில் எழுந்தருள்கிறார். இன்று இரவு 11 மணிக்கு தல்லாகுளத்தில் ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் திருமஞ்சனமாகி 8-ம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு பூப்பல்லக்கில் கள்ளழகர் எழுந்தருளுகிறார்.
அதே கோலத்தில் கருப்பணசாமி கோவில் சன்னதியில் இருந்து அழகர் மலைக்கு புறப்படுகிறார். மூன்றுமாவடி, அப்பன் திருப்பதி, கள்ளந்திரி வழியாக 9-ம் தேதி காலை கள்ளழகர் இருப்பிடம் போய் சேருகிறார்.