ஆலங்குடி, மார்ச். 18-
ஆலங்குடி குருபகவான் கோவிலில் 2023-ஆம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி விழா ஏப்ரல் 22-ம் தேதி நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டம், (நீடாமங்கலம் அருகில்) ஆலங்குடியில் ஆபத்சகாயேஸ்வரர் குரு பரிகார கோவில் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற சிறப்புடையது. திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற ஸ்தலமாகும். நவக்கிரக ஸ்தலங்களில் அருள்மிகு குருபகவானுக்கு பரிகார ஸ்தலமாக விளங்கி வருகிறது.
வரலாற்று சிறப்புமிக்க இக்கோவிலில் வருடம்தோறும் குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடையும் நாளில் குருப்பெயர்ச்சி விழா அதிவிமரிசையாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், இந்த ஆண்டு குருபகவான் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு வரும் ஏப்ரல் மாதம் 22-ம் தேதி சனிக்கிழமை பெயர்ச்சி அடைகிறார். அன்றைய தினம் இக்கோயிலில் குருப்பெயர்ச்சி விழா அதிவிமரிசையாக நடைபெறவுள்ளது. இவ்விழாவையொட்டி குருபகவானுக்கு லட்சார்ச்சனை விழா ஏப்ரல் 16-ம் நாள் ஞாயிற்றுக்கிழமை அன்று தொடங்கி ஏப்ரல் 20-ம் தேதி வியாழக்கிழமை முடிய முதற்கட்ட லட்சார்ச்சனையும், மீண்டும் குருப்பெயர்ச்சிக்குப் பின் ஏப்ரல் 27-ம் நாள் வியாழக்கிழமை முதல் மே 1-ம் நாள் திங்கள்கிழமை முடிய இரண்டாம் கட்ட லட்சார்ச்சனையும் நடைபெறும்.
தமிழகம் மட்டுமல்லாது, பிற மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த விழாவில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் விரிவான ஏற்பாடுகளை நாகப்பட்டினம் இணைஆணையர் ராமு உத்தரவின் பேரில், தக்கார் மற்றும் உதவி ஆணையர், செயல் அலுவலர் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.