சென்னை, ஏப். 15- தமிழ் புத்தாண்டு நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழ் புத்தாண்டான நேற்று வேப்பம்பூ ரசம், மாங்காய் பச்சடி, பானகம், நீர்மோர், பருப்பு வடை, பாயாசம் என இனிப்பு, கசப்பு, துவர்ப்பு, உப்பு, காரம், புளிப்பு என அறுசுவை உணவு வகைகளை சமைத்து உறவினர்களுடன் விருந்து சாப்பிடுவது வழக்கம். மேலும் கோவில்களுக்கு சென்றும் மக்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
தமிழ் புத்தாண்டையொட்டி கோவில்களில் நேற்று மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. வடபழனி முருகன் கோவிலில் நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு பின்னர் கோ பூஜை, காலசந்தி பூஜை நடந்தது. அதன் பிறகு பாலாபிஷேகம் நடைபெற்றது. காலை 11 மணிக்கு உச்சிகால உயர்தர சிறப்பு பாலாபிஷேகம் நடந்தது. அதன் பிறகு முருகருக்கு ராஜ அலங்காரம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இதே போல் திருவேற்காடு கருமாரி அம்மன் கோவில், கோவை புலியகுளம் விநாயகர் கோவில், கோனியம்மன் கோவில், மருதமலை, பேரூர் பட்டீசுவரர் கோவில் ஆகிய கோவில்களிலும் அதிகாலை முதலே பக்தர்கள் திரண்டு நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
மேலும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில், திருவான்மியூர் மருந்தீசுவரர் கோவில், பாரிமுனை காளிகாம்பாள் கோவில், கந்தகோட்டம் முருகன் கோவில், தி.நகர் திருமலை திருப்பதி தேவஸ்தான வெங்கடாசலபதி கோவில், பத்மாவதி தாயார் கோவில் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் நேற்று பக்தர்கள் தமிழ் புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடு நடத்தினர்.