மதுரை, ஏப். 06- மதுரை அழகர்கோவிலில் நேற்று நடந்த திருக்கல்யாண நிகழ்ச்சியில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு சுந்தரராஜ பெருமாள் காட்சியளித்தார்.
தென் திருப்பதி என்றும் திருமாலிருஞ்சோலை என்று அழைக்கப்படும் பிரசித்தி பெற்ற வைணவ தலமான அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் திருக்கல்யாண திருவிழா கடந்த 2-ம் தேதி தொடங்கி விமர்சையாக நடைபெற்று வருகிறது. தினமும் காலை, மாலையில் சுந்தரராஜ பெருமாள் அம்பாளுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவில் சிகர நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நேற்று (5-ம் தேதி) காலை விமரிசையாக நடைபெற்றது. இதை யொட்டி பல வண்ண மலர்கள் மற்றும் விளக்கு களால் கோவில் திருக் கல்யாண மண்டபம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நேற்று காலை 9 மணி அளிவில் மணமேடையில் சிறப்பு அலங்காரத்தில் சுந்தரராஜ பெருமாள் எழுந்தருளினார்.
அதைத் தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி, கல்யாண சுந்தர வல்லி தாயார், ஆண்டாள் ஆகியோர் மணமேடைக்கு வந்தனர். தொடர்ந்து பட்டாச்சா ரியார்கள் வேத மந்திரங்கள் ஓத பெரியாழ்வார் முன்னிலையில் திருமணம் விமரிசையாக நடந்தது. அப்போது அங்கு கூடியிருந்த பெண்கள் உள்பட நூற்றுக்கணக்கான பக்தர்கள் பக்தி கோஷம் முழங்க சாமி தரிசனம் செய்தனர்.
திருமணத்தை முன்னிட்டு கோவில் வளாகம் மற்றும் முன்புறம் உள்ள 2 மண்டபங்களில் விருந்து நடைபெற்றது. இதல் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு திருமண விருந்து சாப்பிட்டனர். தொடர்ந்து பக்தர்கள் திருமண மொய் எழுதினர். இன்று (6-ம் தேதி) மஞ்சள் நீர் சாற்று முறை நடக்கிறது.