மதுரை, ஏப்.23- சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். ஆற்றுப் பகுதியில் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் ‘கோவிந்தா, கோவிந்தா, மாயவதாரா, அழகர்மலையானே’ என உணர்ச்சிப் பெருக்கில் விண்ணதிர கோஷங்கள் எழுப்பினர்.
அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் சித்திரைத் திருவிழா முதல் நாள் ஏப்.19ல் காப்பு கட்டுதல், திருவீதி உலாவுடன் தொடங்கியது. மூன்றாம் நாள் ஏப்.21-ம் தேதி மண்டூக முனிவருக்கு மோட்சம் அளிக்க சுந்தரராஜ பெருமாள், கள்ளழகர் வேடத்தில் கண்டாங்கி பட்டு உடுத்தி நேரிக்கம்புடன் தங்கப்பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டார். அங்கு ராஜகோபுர வாசலிலுள்ள பதினெட்டாம்படி கருப்பணசாமியிடம் உத்தரவு பெற்று புறப்பட்டார்.
பின்னர் கோயில் கோட்டைவாசலை கடந்து பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப்பதி, சுந்தரரராஜன்பட்டி, கடச்சனேந்தல் என வழிநெடுகிலுமுள்ள கிராமங்களில் மண்டகப்படிகளில் எழுந்தருளினார். நேற்று முன்தினம் (ஏப்.22) அதிகாலை 5.30 மணியளவில் மதுரை மாநகர எல்லையான மூன்றுமாவடியில் கள்ளழகருக்கு எதிர்சேவை நடந்தது. புதூர் மாரியம்மன் கோயில், ரிசர்வ்லைன் மாரியம்மன் கோயில் வழியாக அவுட்போஸ்ட் , தல்லாகுளம் அம்பலகாரர் மண்டகப்படியில் நேற்று முன்தினம் மாலை எழுந்தருளினார்.
இரவு 8 மணிக்குமேல் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயிலில் தங்கினார். பின்னர் இரவு 11.30 மணிக்குமேல் திருமஞ்சனமாகி தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்களைந்த மாலையை சூடி அருள்பாலித்தார். நேற்று (ஏப்.23) அதிகாலை தல்லாகுளம் கருப்பணசாமி கோயிலுக்கும், பின்னர் தங்கக்குதிரை வாகனத்தில் ஆயிரம் பொன் சப்பரத்தில் அதிகாலை 3.30 மணியளவில் எழுந்தருளினார். அங்கிருந்து புறப்பட்டு வைகை ஆறு நோக்கி கள்ளழகர் புறப்பட்டார்.
இதற்கிடையில், வைகை ஆற்றில் கள்ளழகரை வரவேற்கும் வகையில் எழுத்தாணிக்காரத்தெரு வீரராகவப் பெருமாள் வெள்ளிக்குதிரையில் காலை 5.03 மணிக்கு வைகை ஆற்றிலுள்ள சந்திப்பு மண்டபத்தில் எழுந்தருளினார். பின்னர் முக்கிய நிகழ்வாக சித்ரா பவுர்ணமியில் கள்ளழகர் வைகை ஆற்றில் தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருள வைகை கரைக்கு அதிகாலை 5.51 மணிக்கு வருகை தந்தார். அங்கு கள்ளழகர் கோயில் சார்பில் பூமாலைகள், வெட்டிவேர் மாலைகள் கள்ளழகருக்கு சாற்றப்பட்டது.
கள்ளழகரைக்காண லட்சக்கணக்கான பக்தர்கள் வைகைக்கரையிலும், ஆற்றிலும் திரளாக காத்திருந்தனர். வீரராகவப்பெருமாள் வரவேற்க, பக்தர்கள் மனங்குளிர கள்ளழகர் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் 6.02 மணிக்கு எழுந்தருளினார். பக்தர்கள் ‘கோவிந்தா, கோவிந்தா, மாயவதாரா, அழகர்மலையானே’ என உணர்ச்சிப்பெருக்கில் கோஷங்களை விண்ணதிர எழுப்பினர்.
இரவு முழுவதும் தூங்காமல் கண்விழித்து களைப்பில் இருந்த பக்தர்கள் கள்ளழகர் முகம் கண்டு மகிழ்ச்சியில்,‘இதற்குத்தானே இவ்வளவு நேரம் காத்திருந்தோம்’ என மகிழ்ச்சிப்பெருக்கில் ஆற்றுக்குள் ஆடிப்பாடி திளைத்தனர். அப்போது ஒலித்த ‘வாராரு, வாராரு அழகர் வாராரு’ திரையிசைப் பாடலுக்கு பக்தர்கள் ஆட்டம் போட்டனர். பெண்கள், ஆண்கள் சர்க்கரை தீபம் ஏற்றி வழிபட்டனர்.
கருப்பசாமி வேடமணிந்த பக்தர்கள் கள்ளழகர் மீது தோல்பை துருத்தி மூலம் தண்ணீர் பீய்ச்சினர். பின்னர் மண்டகப்படியை மூன்றுமுறை வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அங்கு வையாழி ஆகி பின்னர் சந்திப்பு மண்டபத்தில் எழுந்தருளி வீரராகவப்பெருமாளுக்கு முதல் மரியாதையாக மாலை சாற்றினார்.
பின்னர் இந்துசமய அறநிலையத்துறை மண்டகப்படியில் எழுந்தருளினார். இவ்விழாவில் அமைச்சர் பி.மூர்த்தி, ஆட்சியர் எம்.எஸ்.சங்கீதா, மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார், நடிகர் சூரி, மற்றும் உயர்நீதிமன்ற நீதிபகள் பலர் பங்கேற்றனர். பின்னர் பக்தர்கள் வைகை ஆற்றில் முடிக்காணிக்கை செய்தனர்.
பின்பு வைகை ஆற்றிலிருந்து காலை 7.35 மணியளவில் வைகை ஆற்றிலிருந்து புறப்பட்டு ஆழ்வார்புரம் வழியாக ராமராயர் மண்டபம் செல்லும் கள்ளழகர் மீது பக்தர்கள் தண்ணீர் பீய்ச்சி அடித்தனர். பின்னர் அண்ணாநகர் வழியாக வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் நேற்று இரவு எழுந்தருளல் நடைபெற்றது.
இன்று (ஏப்.24) வண்டியூர் வைகை ஆற்றிலுள்ள தேனூர் மண்டபத்தில் மண்டூக முனிவருக்கு மோட்சம் அளிக்கிறார். இன்றிரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம் நடைபெறும். ஏப்.25-ல் பூப்பல்லக்கில் எழுந்தருள்கிறார். ஏப்.26-ல் கள்ளழகர் அழகர்மலைக்குப் புறப்படுகிறார். ஏப்.27-ல் காலை 10.32 மணிக்கு மேல் 11 மணிக்குள் இருப்பிடம் வந்து சேருகிறார். ஏப்.28-ல் உற்சவ சாற்றுமுறையுடன் திருவிழா நிறைவுபெறுகிறது.விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத்தலைவர் வெங்கடாசலம், கோயில் துணை ஆணையர் லெ.கலைவாணன் மற்றும் அறங்காவலர்கள் செய்து வருகின்றனர். மாநகர காவல் ஆணையர் ஜெ.லோகநாதன் தலைமையில் 7000 போலீஸார் பாதுகாப்பு பணியில்