தி.மலை, தி.மலை கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு நேற்று மாலை மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரர் வீதி உலாவும், இரவில் பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும் நடைபெற்றது. திருவிழாவின் சிகர விழாவான மகா தீப திருவிழா நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.
முன்னதாக அதிகாலை 4 மணிக்கு கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மாலை 6 மணிக்கு கோவிலுக்கு பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. மகா தீபத்தை சுமார் 40 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இதையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ளப்பட்டிருந்தது. கோவிலில் நடைபெறும் விழாவினை நேரடியாக வெளிப்பகுதியில் உள்ள பக்தர்களுக்கு ஒளிபரப்ப 20 எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டிருந்தன. பல்வேறு துறைகள் சார்பில் பல முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு தீபத்திருவிழாவிற்கு திருவண்ணாமலை நகரம் தயார் நிலையில் உள்ளது.
இந்த நிலையில், தீபத் திருவிழாவையொட்டி திருவண்ணாமலை மாடவீதிகளில் நேற்று அதிகாலையில் இருந்தே லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். கிரிவலப்பாதையில் ஆங்காங்கே பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மகா தீபத்தை காண பெற்றோர்களுடன் வரும் குழந்தைகள் கூட்டத்தில் காணாமல் போவதை தவிர்க்க அவர்கள் கையில், பெயர், பெற்றோர் பெயர், மொபைல் எண் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய டேக் கட்டப்பட்டிருந்தது. மேலும் கிரிவலப்பாதையில் பக்தர்கள் வருகையை கருத்தில் கொண்டு சிறப்பு மருத்துவ முகாம்கள், ஆம்புலன்ஸ்கள் முன்னெச்சரியாக நிறுத்தப்பட்டிருந்தன. பாதுகாப்பு பணியில் 16,000 போலீசார் ஈடுபட்டிருந்தனர்.