மதுரை, மே. 17- மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வைகாசி வசந்த உற்சவம் வருகிற 24-ம் தேதி முதல் ஜூன் 2 வரை நடக்கிறது.
திருவிழா நாட்களில் தினமும் மீனாட்சி, சுந்தரேசுவரர் பஞ்ச மூர்த்திகளுடன் மாலை 6 மணிக்கு கோவிலில் இருந்து புது மண்டபம் செல்வர். அங்கு பூஜை, தீபாராதனை முடிந்ததும் 4 சித்திரை வீதிகளில் வலம் வந்து கோவிலுக்கு வருவார்கள். ஜூன் 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை திருஞான சம்பந்தர் திருவிழாவும், ஜூன் 5-ம் தேதி காலையில் திருஞானசம்பந்தர் தங்கப்பல்லக்கில் எழுந்த ருளும் நிகழ்ச்சியும், 63 நாயன்மார்களின் 4 ஆவணி மூல வீதி புறப்பாடும் நடக்கிறது.
அன்றிரவு 8 மணிக்கு திருஞானசம்பந்தர் வெள்ளி கோ ரதத்தில் எழுந்தருளி 4 ஆவணி மூல வீதிகளிலும் வலம் வருவார். மே 24-ம் தேதி முதல் ஜூன் 5-ம் தேதி வரை வைகாசி வசந்த உற்சவம் நடப்பதால் உபய தங்கரதம், உபய திருக் கல்யாண நிகழ்ச்சிகள் நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனாட்சி அம்மன் கோவிலின் உப கோவிலான திருமறைநாதர் சுவாமி கோவில் அமைந்துள்ள திருவாதவூரில் மாணிக்கவாசகர் பிறந்தார். இந்த கோவிலில் வைகாசி பிரமோற்சவ விழா வருகிற 23-ம் தேதி முதல் ஜூன் 2-ம் தேதி வரை நடக்கிறது. வருகிற 28-ம் தேதி பஞ்ச மூர்த்திகளுடன் மேலூருக்கு சுவாமி எழுந்தருளுகிறார். மே 31-ம் தேதி காலை 11.15 மணி முதல் 12 மணிக்குள் திருக்கல்யாணமும், ஜூன் 1-ம் தேதி தேரோட்டமும் நடக்கிறது.