மதுரை, மே. 05- மதுரை சித்திரை பெருந்திருவிழாவையொட்டி மதுரை வந்த கள்ளழகரை பக்தர்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நேற்று விடிய விடிய நடந்தது. அதை தொடர்ந்து மதுரை வைகை ஆற்றில் தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அழகரை தரிசனம் செய்வர்.
மதுரை அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் மிகவும் முக்கியமானது சித்திரை பெருந்திருவிழாவாகும். இந்த விழா கடந்த 1-ம் தேதி மாலையில் அழகர்கோவிலில் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அதை தொடர்ந்து திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பின்னர் அலங்கரிக்கப்பட்ட தங்கப்பல்லக்கில் கள்ளழகராக கோலம் கொண்டு பெருமாள் மதுரையை நோக்கி புறப்பட்டார்.
அப்போது 18-ம்படி கருப்பணசுவாமி கோவில் முன்பு விசேஷ பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றது. இதையடுத்து வழி நெடுகிலும் கள்ளந்திரி, அப்பன் திருப்பதி ஜமீன்தார் மண்டபம் உள்ளிட்ட பல மண்டபங்களில் அழகர் எழுந்தருளினார். தொடர்ந்து நேற்று காலையில் மூன்று மாவடி பகுதியில் காலை 6 மணிக்கு சுவாமி அதே பல்லக்கில் எழுந்தருளினார். அப்போது பக்தர்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடந்தது. அதை தொடர்ந்து இரவு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் பெருமாள் திருமஞ்சனமாகி, குதிரை வாகனத்தில் எழுந்தருளி ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாளுடைய திருமாலையை சாற்றி, பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதை தொடர்ந்து இன்று(5-ம் தேதி) அதிகாலையில் 2.30 மணிக்கு மேல் 3 மணிக்குள் ஆயிரம் பொன் சப்பரம் எழுந்தருளல் நடைபெற்றது.
அதை தொடர்ந்து இன்று காலை 5.45 மணிக்கு மேல் 6.12 மணிக்குள் வைகை ஆற்றில் தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் இறங்குகிறார். அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் அழகரை தரிசனம் செய்வார்கள். நாளை 6-ம் தேதி தேனூர் மண்டபத்தில் காலை 9 மணிக்கு அழகர் சேஷ வாகனத்தில் எழுந்தருளுகிறார். பிற்பகல் 3 மணிக்கு கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு சாபம் தீர்த்து காட்சி தந்தருள்வது நடைபெறுகிறது. அதை தொடர்ந்து அன்று இரவு தசாவதார காட்சி நடைபெறுகிறது. இந்த வருடம் 480 மண்டபங்களில் அழகர் எழுந்தருள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி மற்றும் பணியாளர்கள் செய்துள்ளனர்.
விழாவையொட்டி மதுரை புறநகர் பகுதியில் மாவட்ட காவல்துறை சார்பில் வழி நெடுகிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதன்படி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் உத்தரவின் பேரில் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் சுழற்சி முறையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், சீருடை அணியாத போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.