Skip to content
NallaNaal

    • Enter a date to search

Menu
  • இன்றைய நாள் எப்படி
  • விடுமுறை & முக்கிய நாட்கள்
  • ஆன்மீகம்
  • ராசி பலன்கள்
Menu

அரோகரா கோஷம் விண்ணை பிளந்தது: குன்றத்தில் கோலாகலமாக நடந்த தேரோட்ட நிகழ்ச்சி : வடம் பிடித்து இழுத்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்

திருப்பரங்குன்றம், ஏப். 10- திருப்பரங்குன்றத்தில் நேற்று பங்குனி பெருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர். திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி பெருவிழா தீர்த்தவாரியுடன் இன்று நிறைவடைகிறது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல்படை வீடாக விளங்குவது திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில். இங்கு ஆண்டுதோறும் பங்குனி பெருவிழா 15 நாட்கள் விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான பங்குனி பெருவிழா கடந்த மாதம் 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் தினமும் காலையில் தங்கப் பல்லக்கிலும், மாலையில் தங்கமயில் வாகனம், அன்ன வாகனம், வெள்ளிபூத வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தனர்.
கடந்த வெள்ளியன்று முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அட்சதை தூவி சுவாமியை வழிபட்டனர்.
அதை தொடர்ந்து பெண்கள் புதிய மங்கல நாண் அணிந்து கொண்டனர். இரவில் 16 கால் மண்டபம் அருகே பிரியாவிடை நிகழ்ச்சி நடைபெற்றது. தெய்வானையுடன் முருகப்பெருமான் பூப்பல்லக்கில் எழுந்தருளினார்.
திருமணத்தை நடத்தி வைத்து அது சம்பந்தமான நிகழ்ச்சிகளுக்கு பிறகு சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் அங்கிருந்து விடைபெற்று இருபிடத்துக்கு புறப்பட்டு சென்றனர்.
பங்குனி பெருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 5 மணியளவில் உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி மற்றும் தெய்வானைக்கு பால், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 16 வகை பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்பு சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
இதையடுத்து சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் தேரில் எழுந்தருளினார். முதல் ஸ்தானிக பட்டர் சுவாமிநாதன் வெள்ளை வீசியதை தொடர்ந்து காலை 6.30 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. முதலில் சிறிய தேரில் விநாயக பெருமான் புறப்பட்டார். அதனை தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளிய பெரிய தேர் புறப்பட்டது. தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
பெரிய தேர் கிரிவலப்பாதையில் ஆடி அசைந்து வந்தது பார்க்க கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது. கிரிவலப் பாதையில் வழிநெடுங்கிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கிரிவலப்பாதையில் தேர் தங்கு தடையின்றி செல்ல வசதியாக சாலைகள் சீரமைக்கப்பட்டிருந்தன.
சாலையோர ஆக்கிரமிப்புகளும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அகற்றப்பட்டன. இதனால் கிரிவலப் பாதையில் தேரை பக்தர்கள் எளிதாக இழுத்து சென்றனர். தேரோட்டத்தால் கிரிவலப் பாதை, கோவில் வீதிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிவறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் மாநகராட்சி சார்பில் செய்யப்பட்டிருந்தன.
தேரோட்டத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன்நாயர் தலைமையில் சுமார் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தேரோட்ட திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையர் சுரேஷ் தலைமையில் பணியாளர்கள் செய்திருந்தனர். திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி பெருவிழா தீர்த்தவாரியுடன் இன்று நிறைவடைகிறது.

தமிழகம் முழுவதும் தேவாலங்களில் ஈஸ்டர் பண்டிகை சிறப்பு பிரார்த்தனைமதுரை சித்திரைத் திருவிழா மே 1-ம் தேதி தொடக்கம் : மே 5-ல் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

    • Enter a date to search

விடுமுறை மற்றும் முக்கிய நாட்கள்

  • 2025 இந்துக்கள் பண்டிகை
  • 2025 கிறிஸ்துவர்கள் பண்டிகை | List of Christian holidays
  • 2025-ம் ஆண்டு சுபமுகூர்த்த தினங்கள் | Subamuhurtha Dates in 2025
  • கிரகபிரவேச முகூர்த்த நாட்கள் -2025
  • 2025-ல் வாகனங்கள் வாங்குவதற்கான நல்ல நாள் / Vehicles buying Auspicious Dates – 2025
  • 2025 முஸ்லீம்கள் பண்டிகை | List of Muslim holidays
  • கெளரி பஞ்சாங்கம் – 2025
  • 2025 மாத விரத நாட்கள் – அமாவாசை, பெளர்ணமி, கார்த்திகை, சதுர்த்தி, சஷ்டி
  • 2025 ம் ஆண்டிற்கான தமிழக அரசு விடுமுறை நாட்கள்
  • 2024-ம் ஆண்டு சுபமுகூர்த்த தினங்கள் | Subamuhurtha Dates in 2024
  • கிரகபிரவேச முகூர்த்த நாட்கள் -2024
  • 2024-ல் சொத்து வாங்குவதற்கான நல்ல நாட்கள்/Auspicious Dates For Property Registration in 2024

முக்கிய செய்தி

  • வார ராசி பலன்கள் 04.05.2025 முதல் 10.05.2025 வரை
  • ஸ்ரீரங்கம் கோவில் சித்திரை தேரோட்டம்: நான்கு சித்திரை வீதிகளில் வலம் வந்தது
  • வார ராசி பலன்கள் 27.04.2025 முதல் 03.05.2025 வரை
  • வார ராசி பலன்கள் 20.04.2025 முதல் 26.04.2025 வரை
  • வார ராசி பலன்கள் 13.04.2025 முதல் 19.04.2025 வரை
©2025 NallaNaal | Nallanaal.com