திருவனந்தபுரம், ஏப். 11- சித்திரை விஷு சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று (11-ம் தேதி) திறக்கப்படுகிறது. வரும் 15-ம் தேதி விஷுக்கனி தரிசனம் நடைபெறுகிறது.
கேரளாவில் சித்திரை விஷு முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும். இதை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த வருட சித்திரை விஷு பண்டிகை வரும் 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு சபரிமலை கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது.
இன்று மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரர் மகேஷ் மோகனரரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடை திறந்து தீபாராதனை நடத்துவார். இன்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. நாளை 12-ம் தேதி அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம், உஷபூஜை உள்பட வழக்கமான பூஜைகள் நடக்கிறது.
அதைத் தொடர்ந்து அஷ்டாபிஷேகம், கலசாபிஷேகம், படிபூஜை உள்பட சிறப்பு பூஜைகளும் நடைபெறுகிறது. காலை 5.30 முதல் 9 மணி வரை நெய் அபிஷேகம் நடைபெறும். வரும் 15-ம் தேதி விஷுக்கனி தரிசனம் நடைபெறுகிறது. அன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படும். காலை 7:30 மணி வரை பக்தர்கள் விஷுக்கனி தரிசனம் செய்யலாம்.
இந்த சமயத்தில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் தந்திரி, மேல்சாந்தி ஆகியோர் விஷு கை நீட்டமாக நாணயங்களை வழங்குவார். வரும் 19-ம் தேதி வரை சபரிமலை கோயில் நடை திறந்திருக்கும். அன்று இரவு 10 மணிக்கு நடை சாத்தப்பட்டு சித்திரை விஷு சிறப்பு பூஜைகள் நிறைவடையும்.
ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படும். இதற்காக நிலக்கல்லில் உடனடி முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி திருவனந்தபுரம், கோட்டயம், பத்தனம்திட்டா, செங்கனூர் உள்பட பல்வேறு இடங்களில் இருந்து சபரிமலைக்கு இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.