பழனி, ஜன. 20- பழனி பெரியநாயகி கோவிலில் நேற்று தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் வரும் 24-ம் தேதி நடக்கிறது.
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்திருவிழா வெகுசிறப்பாக கொண்டாடப்படும். இத்திருவிழாவின் சிறப்பு அம்சமே பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் பாத யாத்திரையாக வந்து முருகபெருமானை தரிசனம் செய்வதுதான்.
அதன்படி இந்த ஆண்டுக்கான தைப்பூசத்திருவிழா கொடியேற்றம் நேற்று பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து காலை 7 மணிக்கு விநாயகர் பூஜை, புன்னியாகவாஜனம், முத்துக்குமாரசாமி, வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. அதன்பின் காலை 7.30 மணிக்கு கொடிபூஜை, வாத்தியபூஜை நடைபெற்றது.
கொடி படம் மங்கள வாத்தியங்கள் முழங்க கோவில் உட்பிரகாரத்தில் கொண்டுவரப்பட்டது. அதனைத் தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க முருகனை வழிபட்டனர்.
திருவிழாவில் நேற்று உச்சிகால பூஜையில் திருஆவினன்குடி, மலைக்கோவிலில் உள்ள விநாயகர், மூலவர், சண்முகர், உச்சவர், துவார பாலகர்கள் மற்றும் வாகனங்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
10 நாட்கள் நடைபெறும் தைப்பூசத்திருவிழாவில் தினமும் காலை தந்தபல்லக்கில் முத்துக்குமாரசாமி வீதி உலா நடைபெறும். மேலும் தினந்தோறும் இரவு 7.30 மணிக்கு வெள்ளி ஆட்டு கிடா, காமதேனு, தங்கமயில், தங்ககுதிரை உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெறும்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் வருகிற 24-ம் தேதியும், தேரோட்டம் 25-ம் தேதியும் நடைபெறுகிறது. தைப்பூச திருவிழாவை காண தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக பழனி கோவிலுக்கு வந்தவண்ணம் உள்ளனர்.
பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் மாவட்ட நிர்வாகம் மற்றும் தேவஸ்தானம் சார்பில் சிறப்பாக செய்து தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.