திருப்பதி, நவ. 19- திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் நேற்று பஞ்சமி தீர்த்தம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் திருக்குளத்தில் புனித நீராடினர்.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தினமும் காலை மற்றும் இரவில் தாயார் வாகனங்களில் எழுந்தருளி மாடவீதிகளில் வலம் வந்து பந்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவின் சிகர நிகழ்வான பஞ்சமி தீர்த்தம் நேற்று நடைபெற்றது. பஞ்சமி தீர்த்த உற்சவத்தை முன்னிட்டு உற்சவ தாயார் கோவிலில் இருந்து புறப்பட்டு மாட வீதிகள் வழியாக திருக்குளத்தை அடைந்தார். உடன் சக்கரத்தாழ்வாரும் எழுந்தருளினார். அங்கு உற்சவர்களுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர், தீர்த்தவாரி நடைபெற்றது.
சக்கரத்தாழ்வாரை திருக்குளத்தில் மூன்று முறை மூழ்க செய்து தீர்த்தவாரி நடத்தப்பட்டது. அப்போது தேவஸ்தான அறங்காவலர் குழுவினர், அதிகாரிகள், பக்தர்கள் என லட்சக்கணக்கானோர் திருக்குளத்தில் புனித நீராடினர்.
கார்த்திகை மாத பஞ்சமி நாளில் திருச்சானூர் திருக்குளத்தில் பத்மாவதி தாயார் ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலரில் அவதரித்தார் என்கிறது புரணம். எனவே, தாயார் அவதரித்த புனித பஞ்சமி தினத்தில், அவர் அவதரித்த அதே திருக்குளத்தில் நீராடுவதை பக்தர்கள் பெரும் பாக்கியமாக கருதுகிறார்கள். பஞ்சமி தீர்த்த நிகழ்ச்சியை முன்னிட்டு திருப்பதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.