தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் ஸ்ரீ சத்குரு தியாகராஜ சுவாமிகளின் 177-வது ஆராதனை விழா ஜனவரி 26-ம் தேதி தொடங்குகிறது. இந்த விழாவுக்கான பந்தகால் நடும் நிகழ்வு தியாகராஜ சுவாமிகள் ஆஸ்ரம வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு மேற்கொள்ளப்பட்டு, ஆஸ்ரம வளாகத்தில் பந்தல் காலுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ஸ்ரீ தியாக பிரம்ம மகோத்சவ சபா அறங்காவலர் எஸ். சுரேஷ் மூப்பனார் உள்ளிட்டோர் பந்தல் காலை நட்டு வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் சுரேஷ் மூப்பனார் கூறுகையில்,
திருவையாறில் சத்குரு தியாகராஜ சுவாமிகளின் 177-வது ஆராதனை மகோத்சவ விழா ஜனவரி 26-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் தியாகராஜ சுவாமிகள் சித்தி அடைந்த பகுள பஞ்சமி நாளாகிய ஜனவரி 30-ம் தேதி ஆராதனை விழா நடைபெறுகிறது.
இதில் இசைக் கலைஞர்கள் பஞ்சரத்ன கீர்த்தனைகளை பாடி ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளுக்கு அஞ்சலி செலுத்தவுள்ளனர். இவ்விழா தேசிய நிகழ்ச்சியாக ஜனவரி 27-ம் தேதி இரவு 9.30 மணி முதல் 11 மணி வரை அகில இந்திய வானொலியில் நேரலையாக ஒலிபரப்பப்படும்.
ஜனவரி 26-ம் தேதி மாலை 5 மணியளவில் நடைபெற உள்ள தொடக்க விழாவில் சபா தலைவர் ஜி.கே. வாசன் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்கவுள்ளனர் என்று கூறினார்.
முன்னதாக, நேற்று நடந்த பந்தல் கால் நடும் விழாவில் சபா அறங்காவலர்கள் மிதுன் மூப்பனார், எம்.ஆர். பஞ்சநதம், டெக்கான் என்.கே. மூர்த்தி, என்.ஆர். நடராஜன், உதவிச் செயலர் கோவிந்தராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.