திருப்பதி, செப். 30- தொடர் விடுமுறையால் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. 30 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.
உலக பிரசித்திப் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை என்பதாலும் வார இறுதி நாட்கள் மற்றும் காந்தி ஜெயந்தி என்பதாலும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கூட்டம் அதிகரித்துள்ளது. மேலும் நேற்று பவுர்ணமியை முன்னிட்டு தங்க கருட சேவை நடைபெற்றது.
இந்நிலையில் எழுமலையானை பக்தர்கள் தரிசனம் செய்ய சுமார் 30 மணி நேரம் ஆனது. தற்போது விஐபி பிரேக் தரிசனம், சிறப்பு தரிசனம், கட்டண விரைவு தரிசனம் ஆகியவற்றுக்கு அனுமதி வழங்கப்படுவதால் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனத்திற்காக இலவச தரிசனத்தில் வைகுண்டம் காத்திருப்பு அறையில் 31 அறைகளும் நிரம்பிய நிலையில், பக்தர்கள் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். இலவச தரிசனத்தில் பக்தர்களுக்கு 30 மணி நேரம் காத்திருப்பதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆதார் மூலம் டிக்கெட் பெறும் பக்தர்களுக்கு 6 மணி நேரமும், ரூ.300 மற்றும் கல்யாண உற்சவம் உள்ளிட்ட சேவை டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்து வரக்கூடிய பக்தர்கள் 4 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இலவச தரிசனத்தில் காத்திருக்கும் பாக்தர்களுக்கும், வைகுண்ட அறையில் காத்திருக்கும் பக்தர்களுக்கும் 2 மணி நேரத்திற்கு ஒருமுறை அன்னப்பிரசாதம், பால் உள்ளிட்டவை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பக்தர்கள் தங்களுக்கு உண்டான தரிசனை நேரம் வரும் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்ய வேண்டும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் தொடர் விடுமுறை என்பதால் பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.