திருவனந்தபுரம், சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று கார்த்திகை மாத பிறப்பையொட்டி மண்டல கால பூஜை தொடங்குகிறது. இதையொட்டி மாலை அணிந்து ஐயப்ப பக்தர்கள் விரதம் மேற்கொள்கின்றனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நேற்று நடை திறக்கப்பட்டது. இன்று (கார்த்திகை 1) மண்டல பூஜை காலம் தொடங்குகிறது. 41 நாட்கள் மண்டல பூஜை நடைபெறும். அதன் பிறகு மகர விளக்கு பூஜை காலம் தொடங்கும்.
இந்த காலத்தில் மாலை அணிந்து விரதம் இருந்து லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் சபரி மலைக்கு செல்வார்கள். மண்டல பூஜை காலத்தில் சபரிமலைக்கு செல்பவர்கள் பம்பை வரை வாகனங்களில் செல்வார்கள். அங்கிருந்து சின்னப் பாதை எனப்படும் நீலிமலை வழியாக கால்நடையாக ஐயப்பன் சன்னிதானம் செல்வார்கள்.
மகரவிளக்கு காலத்தில் செல்லும் பக்தர்களில் பலர் எரிமேலி வரை வாகனங்களில் செல்வார்கள். அங்கு பேட்டை துள்ளி விட்டு அடர்ந்த காட்டுப் பகுதியான பெருவழி பாதையில் நடந்து செல்வார்கள்.
பேரூர்தோடு, காளைகட்டி, அழுதாமலை, கல்லிடும் குன்றம், கரிமலை, பெரியானை வட்டம் வழியாக பம்பை சென்றடைவார்கள் அங்கிருந்து நீலிமலை வழியாக சன்னிதானம் செல்வார்கள்.
இன்று விரதத்தை தொடங்கும் ஐயப்ப பக்தர்கள் அதிகாலையில் துளசி மாலை அணிவார்கள். அதன்படி புனிதமான மாலை அணியும் நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.