சிவகங்கை, சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீர்த்தவாரி செப்டம்பர் மாதம் 7-ம் தேதி நடக்கிறது.
திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் அமைந்துள்ள கற்பக விநாயகர் கோவிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி பெருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விநாயகர் சதூர்த்தி பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதை தொடர்ந்து மூஷிக வாகனத்தில் கற்பகவிநாயகர் எழுந்தருளி வீதி உலா வந்தார். 2-ம் நாளான இன்று (வெள்ளிக்கிழமை) இரவில் சிம்ம வாகனத்திலும், 3-ம் நாள் இரவில் பூத வாகனத்திலும் சுவாமி வீதி உலா வருகிறார்.4-ம் நாள் இரவு கமல வாகனத்திலும், 5-ம் நாள் இரவு ரிஷப வாகனத்திலும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
6-ம் நாள் விழாவாக வருகிற 3-ம் தேதி மாலை 4 மணிக்கு கற்பகவிநாயகர், சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 7-ம் நாள் விழாவில் 4-ம் தேதி இரவு மயில் வாகனத்திலும், 8-ம் நாள் விழாவான 5-ம் தேதி இரவு வெள்ளி குதிரை வாகனத்திலும் சுவாமி வீதி உலா வருகிறார்.
9-ம் நாள் விழாவான 6-ம் தேதி காலை சுவாமி திருத்தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் மாலையில் தேரோட்டமும் நடக்கிறது. மேலும் அன்றையதினம் மூலவர் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். 10-ம் நாள் விழாவாக 7-ம் தேதி விநாயகர் சதுர்த்தியன்று அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
பின்னர் காலையில் கோவில் குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடக்கிறது. மேலும் காலையில் தங்க மூஷிக வாகனத்தில் உற்சவர் திருக்குளத்தில் எழுந்தருளுகிறார். இரவு பஞ்சமூர்த்தி சுவாமி புறப்பாடு நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் காரைக்குடி மெய்யப்ப செட்டியார் மற்றும் பூலாங்குறிச்சி முத்துராமன் செட்டியார் ஆகியோர் செய்து வருகின்றனர்
முன்னதாக கோயில் கொடி மரத்திற்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் மற்றும் புனித நீர் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து கொடியேற்ற நிகழ்ச்சி சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க வெகு விமர்சியாக நடைபெற்றது. மேலும், விழாவின் முக்கிய நிகழ்வான தீர்த்தவாரி வரும் செப்டம்பர் 7-ம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.